இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றத்தினால் மற்றுமொரு தடை உத்தரவு!

இந்த செய்தியை பகிருங்கள்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, மக்களை தூண்டிவிட தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்து பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம், களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அத்துடன், இது குறித்த அறிவிப்புக்கள் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பதவி உயர்வுகளோ அல்லது பதவிகளோ கிடைப்பது போன்று தனக்கு நீதிமன்ற தடை உத்தரவுகள் கிடைத்துக் கொண்டிருகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் பங்கேற்க நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இன்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவினால் எனக்கு மூன்றாம் திகதி முதல் 6ஆம் திகதி வரையிலான போராட்டத்தில் கலந்து கொள்வதனை தடை செய்யுமாறு களுவாஞ்சிக்கொடி பொலிஸினால் நீதிமன்றங்களை நாடி பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவு என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதில் மிகவும் வேடிக்கையான விடயம் என்னவென்றால், இந்த விடயம் தொடர்பாக கொரோனாவினை காரணம் காட்டி, கொரோனா காலப்பகுதியில், சமூக இடைவெளி பேணப்பட வேண்டும், சமூக இடைவெளியினை பேணாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யப்படக் கூடாது எனச் சொல்லி நீதிமன்றங்களை நாடியுள்ளனர்.

ஆனால் கொழும்பில் கிழக்கு முனையம் துறைமுகத்தினை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு பொலிஸாரினால் தடை உத்தரவு வழங்க முடியாது. ஏன் அது அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயம்.

கடந்த காலத்தில் அரசியல்வாதிகளுடைய விடுதலை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானை விடுதலை செய்த போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்த வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு பொலிஸாரினால் எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

அதற்கு முன்னரான காலப்பகுதியில், அதாவது கொரோனா ஆகக்கூடுதலாக இருந்த காலப்பகுதியில் கூட இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் அமைச்சர்கள் பதவிப்பிரமானம் செய்து கொண்டதற்கு நடைபவணி செய்ததற்கு தடை உத்தரவு எடுக்காத பொலிஸாரினால்,

ஒரு ஜனநாயக விரோதமான அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு தடை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை ஒரு வேடிக்கையான விடயம்.

இது நான் எதிர்பார்த ஒரு விடயம் தான். எனக்கு பதவி உயர்வுகளோ அல்லது பதவிகளோ கிடைப்பது போன்று நீதிமன்ற தடை உத்தரவுகள் கிடைத்துக் கொண்டிருகின்றன. நான் நினைகின்றேன் கடந்த ஒரு ஆறுமாத காலமாக 10 இற்கும் மேற்பட்ட தடை உத்தரவுகள் எனக்கு கிடைத்துள்ளன. தடை உத்தரவுகள் கிடைப்பது தற்போது மதியம் உணவருந்துவது போல ஒரு இயல்பான விடயமாக எனக்கு மாறியுள்ளது.

இதில் குறிப்பாக ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு இனங்களுக்களுக்கெதிராக, மதங்களுக்கு எதிராக பிரச்சினைகளை தூண்டும் விவமாக நாங்கள் செயற்படுவோம் எனக்கூறி இந்த தடை உத்தரவினை எடுத்திருந்தாலும் கூட, உண்மையில் அப்படியாக இருந்தால் இந்த நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு எடுக்கப்பட வேண்டும்.

இனங்களுக்கு எதிரான குழப்பங்களை அவர்களே செய்கின்றனர். அதாவது எங்களுடைய தமிழ் ஆலயங்களில் மத வழிபாடுகள் செய்வதை தடை செய்து, அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை அமைத்து இந்த அரசாங்கம், இந்த ஜனாதிபதி, ஆளுநர் போன்று தொல்பொருள் அதிகாரிகளே இனங்களுக்கெதிரான பிரச்சனைகளை தூண்டிவிடுகின்றனரே தவிர நாங்கள் செய்யவில்லை.

இந்த போராட்டம் கூட அமைதியான போராட்டம். 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை பல்வேறு விடயங்களை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதிலும் குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதி, ஜனாசா எரிப்பு, மாவீரர் தினத்தன்று முகப்புத்தகத்தில் பதிவிட்ட 40 இளைஞர்களின் விடுதலை, தோட்டத்தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் விவகாரம் உள்ளிட்ட ஜனநாயகவிரோத செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.“ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..