இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் பல்வேறு கட்டுப்பாடுகள்

இந்த செய்தியை பகிருங்கள்!

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கிடையில் இன்று நள்ளிரவு முதல் பயணத்தடை அமுலுக்குவரும். இதன்படி மாகாண எல்லைகளில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். சோதனைகள், கண்காணிப்புகள் இடம்பெறும்.

முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை மாகாணங்களுக்கு இடையில் செல்ல அனுமதி அட்டையாக பயன்படுத்தலாம்.

சுற்றுலா, உறவினர்களை சந்தித்தல், ஹோட்டல்களில் தங்குதல் உட்பட தனிப்பட்ட விடயங்களுக்காக மாகாணங்களில் இருந்து வெளியேறுவதற்கும், உள்நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாகாண எல்லையை கடப்பதற்கு குறுக்கு வழிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவியல் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாகாண எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குங்கள். நீங்கள் வழங்கும் தகவல்கள் திருப்தியில்லையெனில் அவர்களால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவும்.

கூட்டம், கருத்தரங்கு, கண்காட்சி, சமய நிகழ்வுகள், விருந்துபச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களும், அனுமதி வழங்கியவர்களும் கைது செய்யப்படுவார்கள். மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு அனுமதி பத்திரம் எதுவும் வழங்கப்படாது.

இலங்கையில் கோவிட் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளை விதிக்குமாறு நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  பணிப்புரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..