உருத்திரபுரம் கூழாவடிச்சந்திப் படுகொலை

இந்த செய்தியை பகிருங்கள்!

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவில் உருத்திரபுரம் கிராமம் அமைந்துள்ளது. இப்பிரதேச மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்றது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில் இக்கிராமத்திற்கு சிறப்பாக கொடுக்கின்றது. உருத்திரபுரம் வடக்கு, உருத்திரபுரம் மற்றும் சிவநகர்ப் பிரதேச மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு உருத்திரபுரம் வடக்கு கூழாவடிச் சந்தியில் சந்தை, வாசிகசாலை, கூட்டுறவுச்சங்கம் கமநல நிலையம், விளையாட்டுக்கழகம், கடைகள் என்பன அமைந்துள்ளன.

04.02.1992 அன்று சிறிலங்காவின் நாற்பத்துநான்காவது சுதந்திரதினம் தமிழர்கள் வாழும் பகுதியான வடக்குக் கிழக்குத் தவிர்ந்த ஏனைய இடங்களில் சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டன. முற்பகல் 11 மணியளவில் விமானப்படையின் இரண்டு “பொம்பர்” விமானங்கள் உருத்திரபுரம் பகுதியை ஐந்து நிமிடங்களாக வட்டமிட்டன. அப்போது கூழாவடிப் பகுதியில் மக்கள் சந்தையில் அதிகளவில் கூடிநின்றனர். இவ் விமானங்களின் இரைச்சலினால் மக்கள் செய்வதறியாது அங்குமிங்கும் ஓடினர். சந்தியில் நின்ற பாரிய கூழாமரத்தின் கீழும், சந்தியிலுள்ள மதகின் கீழும் பாதுகாப்புத் தேடி ஒளிந்துகொண்டனர். இந்த நேரத்தில் குண்டுவீச்சு விமானங்கள் நான்கு குண்டுகளை அப்பகுதி மீது அடுத்தடுத்து வீசின. அதில் ஒரு குண்டு வெடிக்கவில்லை ஏனைய குண்டுகள் மதகின் அருகில் வீழ்ந்து வெடித்தன.

இச்சம்பவத்தின் போது மதகினுள் பாதுகாப்புக்காகத் தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் பதினொரு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோரின் உடல்கள் சிதைந்த நிலையிற் காணப்பட்டன. கால்வாயில் பாய்ந்து கொண்டிருந்த நீர் இவர்களின் இரத்தமும் கலந்து சிவப்பாக ஓடியது. இந்த சம்பவத்தின்போது இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஈமச்சடங்குகள் மறுநாள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும் “பொம்பர்” விமானங்கள் இந்தப் பகுதியில் குண்டுத் தாக்குதல்களை மேற்க்காண்டன.
உயிரிழந்தவர்களின் நினைவாக இப்பிரதேச மக்களாலும், பொது அமைப்புக்களினாலும் கூழாவடிச் சந்தியில் 2002ம் ஆண்டு நினைவாலயம் திறக்கப்பட்டுள்ளது.

உருத்திரபுரத்தைச் சேர்ந்த டாக்டர் கே.வி.கே. திருலோகமூர்த்தி அகில இலங்கை சமாதான நீதவான் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவம் பற்றி தெரிவிக்கையில்.

திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும், வைத்தியராகவும் உள்ள நான் 1991ம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி உருத்திரபுரம் கூழாவடிச்சந்தியில் தனியார் மருத்துவ மனையையும், அத்தோடு எனது அலுவலகத்தையும் நடத்தி வந்தேன். 1991 பெப்ரவரி மாதம் நான்காம் திகதியும் வழமைபோல எனது வைத்தியசாலையைத் திறந்து நடத்திக்கொண்டிருந்தேன். அன்றைய நாள் சிறிலங்கா சுதந்திரம் அடைந்த தினம் என்பதால், பாடசாலை, அரச திணைக்களங்கள் எல்லாவற்றிற்கும் விடுமுறை நாள். கூழாவடிச் சந்தியில் தான் சந்தையும் இருக்கின்றது. நேரம் நண்பகல் 11.00 மணியிருக்கும் சந்தையில் நிறையச் சனக்கூட்டமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் பாடசாலை விடுமுறை என்பதால், பாடசாலை மாணவர்கள் அங்கு நின்று விளையாடிக்கொண்டும் நின்றார்கள் அந்த நேரம் சிறிலங்கா விமானப்படையினருடைய பொம்பர் விமானங்கள் வானில் வட்டமிட்டன. முதல் ஒரு குண்டு அடிச்சவன் ஒருத்தருக்கும் சேதமில்லை சனங்கள் எல்லாப்பக்கத்தாலயும் பதற்றத்துடன் ஓடினார்கள். நான் ஒரு வைத்தியர் என்பதால் அங்குள்ள எல்லோரையும் எனக்கு நன்றாகத் தெரியும் சிலர் பாலத்துக்குக் கீழ ஓடினார்கள் டொக்ரர் வாங்க என்று சொல்லி என்னையும் கூப்பிட்டவர்கள் தான் நான் துவிச்சக்கர வண்டியிலே சிவநகர்ப் பக்கமாக ஓடி விட்டேன். இரண்டாவது குண்டு பாலத்துக்குள்ள விழுந்து வெடிச்சதால சம்பவ இடத்திலேயே ஒன்பது பேரும் உயிரிழந்தார்கள், இருவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த
இருவருக்கும் நான் தான் மருந்து கட்டிவிட்டேன்.”

04.02.1992 அன்று உருத்திரபுரம் கூழாவடிச்சந்திப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

01. நாகலிங்கம் தயாபரன் (வயது 14 – மாணவன்)
02. கணபதிபிள்ளை ஜெயலிங்கம் (வயது 08 – மாணவன்)
03. பாலசிங்கம் ஜெயதீஸ்வரன் (வயது 15 – மாணவன்)
04. பஞ்சலிங்கம் பாலேந்திரன் (வயது 23 – வியாபாரம்)
05. முருகேசு தர்மலிங்கம் (வயது 38 – தொழிலாளி)
06. கோபாலசிங்கம் ஜெயகோபால் (வயது 20 – வியாபாரம்)
07. பேனாட்சோ தயாபரன் (வயது 12 – மாணவன்)
08. சுந்தரலிங்கம் சந்திரகுமார் (வயது 16 – மாணவன்)
09. விநாயகமூர்த்தி கருணாகரன் (வயது 29 – தொழிலாளி)

காயமடைந்தவர்களின் விபரம்:

01. கணபதிப்பிள்ளை இராசன் (வயது 16 – மாணவர்)
02. கணேசன் தவநேசன் (வயது 18 – மாணவர்)

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

இந்த செய்தியை பகிருங்கள்!

Leave a Reply

Your email address will not be published.

eight − five =

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..