சுமந்திரனுக்கு உள்ள அச்சுறுத்தல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கோரிக்கை

இந்த செய்தியை பகிருங்கள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு, எவ்வாறான அச்சுறுத்தல் உள்ளது என்பது தொடர்பில் ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, காவல்துறைமா அதிபரிடம், சபாநாயகர் கோரியுள்ளார்.

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் எமது செய்திச் சேவைக்கு இந்த விடயத்தை உறுதிப்படுத்தியது.

தமிழ் பேசும் மக்களின் நீதிக்கான கோரிக்கையை முன்வைத்து, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் இடம்பெற்றதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட மேலும் சில அரசியல்வாதிகளும் இது தொடர்பில் சபையில் வினவினர்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் சரத் வீரசேகர, தாமே அவருக்கான விசேட பாதுகாப்பை நீக்கியதாகவும், நீதிமன்றம் மற்றும் காவற்துறையினரின் உத்தரவை மீறி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் சுமந்திரன் கலந்துக் கொண்டமையாலும், சுமார் 2000 பேர் வரையில் பங்கேற்றிருந்த பேரணியில் கலந்துக் கொண்ட அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்க வாய்ப்பில்லை என்பதாலேயே அவரது பாதுகாப்பை நீக்கியதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும், சுமந்திரனுக்கான விசேட பாதுகாப்பை மீள வழங்குமாறு சபையில் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டது.

இதேநேரம், தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமாக இருந்தால், அதற்கு அமைச்சர் சரத் வீரசேகரவே தனித்து பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எவ்வாறான அச்சுறுத்தல் உள்ளது என்பது தொடர்பில் ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, காவல்துறைமா அதிபரிடம், சபாநாயகர் கோரியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இது தொடர்பான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமக்கு அச்சுறுத்தல் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றில் தெரிவித்திருந்ததுடன், நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலும் இது குறித்து வினவியதன் அடிப்படையில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..