தனியார் காணியினை இராணுவத்திற்கு வழங்கும் திட்டம் , பொதுமக்கள் போராட்டத்தினை தொடர்ந்து கைவிடப்பட்டது

இந்த செய்தியை பகிருங்கள்!

யாழ். தென்மராட்சி ஜே/334கிராம அலுவலர் பிரிவில் உள்ள தனியார் காணியை அளவீடு செய்யும் நில அளவைத் திணைக்களத்தின் முயற்சி பொது மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட எழுதுமட்டுவாழ் வடக்கு ஜே/334கிராம அலுவலர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான 50 ஏக்கர் காணியை நில அளவைத் திணைக்களம் அளவீடு செய்வதற்கு நேற்று சென்றிருந்தனர்.

எழுதுமட்டுவாழ் வடக்கு 52ஆவது படைத் தலைமையகம் அமைந்துள்ள தனியார் காணியே கையகப்படுத்தி இராணுவத்தினருக்கு வழங்கப்பட இருப்பதாகத் தெரிவித்து எழுதுமட்டுவாழ் வடக்கு 52வது படைத்தலைமையகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது காணியை அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தினரை போராட்டக்காரர்கள் காணியை அளக்க விடாது தடுத்தனர். இந்நிலையில் அங்கு சென்ற தென்மராட்சி பிரதேச செயலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்து தான் உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடி தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

இருப்பினும் பிரதேச செயலரின் உறுதிமொழியையும், போராட்டக்காரர்களின் எதிர்ப்பையும் மீறி நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இருவர் படை முகாமிற்குள் சென்றனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏ-9வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படைமுகாம் உள்ளே சென்ற நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் வெளியேற வேண்டும், மீண்டும் இவ்விடத்தை நாடக் கூடாது என்ற கோஷங்களை எழுப்பியவாறு சுமார் 30நிமிடங்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் கடும் எதிர்ப்பையடுத்து நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..