தமிழரசை அழிக்க வெளியிலிருந்து யாரும் வரத் தேவையில்லை !

இந்த செய்தியை பகிருங்கள்!

அவதானி

“உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட் டாய் ”
என்று மாறி மாறிச் சொல்லித் தோப்புக்கரணம் போடுகின்றனர் சுமந்திரனும், மாவையும். இன்று தமிழர் அரசியலில் உள்ள சம்பந்தன் ஐயாவுக்கு அடுத்ததாக ஏதோவகையில் மக்கள் பிரதிநிதியாக விளங்கியவர் என்ற வரலாறு சொலமன் சூ சிறிலுக்கு உண்டு. இராசா.விஸ்வநாதன் யாழ். மாநகரசபை முதல்வராக இருந்த காலத்தில் சபை உறுப்பினராக விளங்கியவர் ( 1970 களில் ). 2004 தேர்தலில் நமது ஈழ நாடு நாளிதழ் கட்டம் கட்டப்பட்ட செய்தியாக “மாவையும் வெற்றி பெற்றார்” என்று எதனையோ சூசகமாகச் சுட்டிக்காட்டியது. இத்தேர்தலில் சிறிலும் போட்டியிட்டார்.
2009 இன் பின்னர் கட்சித் தலைமை, பேச்சாளர்கள் என்ற வகையில் சுரேஷ்பிரேமச்சந்திரன்,சுமந்திரன்,மாவை சேனாதிராஜா ஆகியோரால் கழுத்தறுக்கப்பட்டார் சிறில். 2010 தேர்தலின் போது “முன்னைய எம்பிக்கள் சிலருக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்படவில்லையே“ என பி. பி. சி அப்போதைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக விளங்கிய சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்டது. அதற்கு அவர் “அரசுடன் இணைந்து செயற்பட் டோர் (தங்கேஸ்வரி,கிசோர்,கனகரத்தினம்) ,நீண்டகாலம் வெளி நாட்டில் தங்கியிருந்தோர் தவிர அனைவருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது என்று உண்மைக்கு மாறாகப் பதிலளித்தார். சிறில் அரசுடன் இணையவில்லை ; வெளிநாட்டில் தங்கியிருக்கவும் இல்லை. அப்படியானால் ஏன் பழிவாங்கப்பட் டார்? புலிகளின் தெரிவாக தேர்தலில் போட்டியிட்டவர் என்பதே மறைந்திருக்கும் உண்மை.
சமாதான காலத்தில் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டபின் ஒத்திவைக்கப்பட்ட யாழ் .மாநகரசபைத் தேர்தலில் சி.வி. கே .சிவஞானமும் சிறிலுமே மேயர் தெரிவிக்கான புலிகளின் பரிசீலனையில் இருந்தனர். சி.வி. கே.மாநகரசபை ஆணையாளர் பதவி வகித்தவர். சிறில் ஏற்கெனவே உறுப்பினராக இருந்தவர்.
கடந்த மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் மூத்த உறுப்பினர்கள் என்று பார்த்தால் சிறிலுக்கே அந்தத்தகுதி இருந்தது. ஆனாலும் அப்போது சுமந்திரனின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்ததால் அவரை நிராகரிக்க ஒரு காரணத்தை தேடிப்பிடித்தார். “வெளிநாட்டு பிரதிநிதிகள் வரும்போது உரையாடிக் கருமமாற்றக்கூடிய ஒருவரே மேயர்“என்று முதலடியைப் போட்டார். இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை வேண்டுமென்று வடமாகாண சபையில் தீர்மானம் கொண்டு வந்தவர் வடக்கு முதலமைச்சர். அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் சுமந்திரனின் கண்ணசைவுக்கிணங்க நெறிப்படுத்தியவர் ஆர்னோல்ட். அதற்கு சன்மானமாகவே மேயர் பதவி. இந்தக் களயதார்த்தத்தை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.என்பதே தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கு மறைமுகமாக சுமந்திரன் சொன்ன செய்தி.
கட் சி தலைமையகத்தில் மேயர் தொடர்பான விடயம் பற்றி கணனியில் தட்டச்சு செய்யும்போது வெளியில் வந்து “ஆர்னோல்ட்தான் மேயர்“ என்று ஊடகங்களுக்கு தன்னிச்சையாக அறிவித்தார் சுமந்திரன். இது தொடர்பாக தமிழரசின் தலைவரும், செயலரும் “இவ்வாறாக இன்னும் முடிவெடுக்கப்படவில்லை” என மறுத்தனர். இதைச் சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர்களுக்கு “அவர்கள் அப்படித்தான் சொல்லவர்கள். ஆனால் ஆர்னோட்தான் மேயர்” என மீண்டும் உறுதிப்படுத்தினார் சுமந்திரன்.
அன்று அவருக்கு கட்சித் தலைமையோ,செயற்குழுவோ, வேட்பாளர் தெரிவுக் குழுவோ ஒரு பொருட்டல்ல . அன்று ஒரு ஆளுமையுள்ள தலைவராக எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்யத் தவறி விட்டார் மாவை. சுமந்திரன் என்ற காட்டாற்று வெள்ளத்தில் நீச்சலடிக்கத் தெரியாத அப்பாவியாகவே இருந்தார். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக விளங்கிய மோகனதாசும் வேட்பாளராக இருக்கிறாரே என்று சுமந்திரனின் முகத்துக்கு நேரே சுட்டிக்காட்டவும் துணியவில்லை மாவை.
இன்று ஆர்னோல்ட்டுக்கும் சுமந்திரனுக்கும் பகை. ஆகையால் ஏனையோரைப்போல சிறிலின் பெயரை முன்மொழிந்தார் சுமந்திரன். தேர்தல் முடிந்தபின்னர் நிலாந்தனிடமோ அல்லது வேறு யாரிடமோ ஆங்கிலம் கற்றுத் தேறிவிட்டார் சிறில் எனக் கருதுகிறாரோ? அன்றும் சிறிலை மேயர் பதவிக்கான வேட்பாளர் ஆக்கினால் ஆதரவு தருவதாக ஏனைய கட் சிகள் குறிப்பிட்டன. அதனைப் பொருப்புபடுத்தாத சுமந்திரன் ஆர்னோல்டை மேயராக்கி அழகு பார்த்தார். இன்று தான் சுத்தமான சூசைப்பிள்ளை போல சிறிலை மேயராக்கும் முயற்சியை மாவை முன்னெடுக்க வில்லை என்றும் சபையின் ஆட் சியை இழந்தமைக்கு மாவையே பொறுப்பு எனவும் நாடகமாடுகிறார்.
ஒரு துணைவேந்தரை அரசியல் அரங்கிலிருந்து அகற்றியதற்கு தானே பொறுப்பு என ஒப்புக்கொள்ளும் தைரியம் இருந்தால் இவர் மாவையின் தவறை சுட்டிக்காட்டுவதை ஏற்கலாம்.
போதாததற்கு மாவையும் போட்டி நடனம் ஆடுகிறார். சிறிலின் பெயரை எந்த உறுப்பினருமே முன்மொழியவில்லை என்று சின்னப் பிள்ளைத்தனமாக கூறுகிறார்.தனியே கூட்டமைப்பு உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்தால் போதும் என்றா அவர் கருதுகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் தான் ஈ.பி.டி.பி, முன்னணி போன்ற கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்றார். சிறிலை மேயராக்குங்கள் என்று ஈ.பி .டி. பி யும் ஆர்னோல்ட்டைத் தவிர வேறு யாரையாவது வேட்பாளராக்கினால் ஆதரவளிப்போம் என முன்னணியும் சுட்டிக்காட்டியபோதும் ஏன் இப்படி சொதப்பினார் மாவை?
ஒரே ஒரு காரணந்தான். சிறில் புலிகளுக்கு ஆதரவானவர். தன்னைப்போல வேஷம் போடுபவர் அல்ல என்பதை உணந்திருக்கிறார்மாவை. தமிழ்த் தேசிய அரசியலில் தன்னைத் தவிர வேறு எவருக்கும் வரலாறு இருக்கக்கூடாது என்பது மாவையின் நிலைப்பாடு.
கருணா பல களம்களைக் கண்டவர்தான்.படை நடத்தியவர்தான் ஆனால் வரலாறு எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றிவிட்டது. அதேபோல மாவைக்கு தமிழ்த் தேசியத்துக்கான சிறை சென்ற வரலாறு முதற்கொண்டுள்ளது. உணர்வாளர்களான பேராசிரியர் சி,க சிற்றம்பலம் போன்றோரை ஒதுக்கியதால் இன்று ஜால்ராக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
தலைமைத்துவ ஆளுமைக்ககுறைபாடு;,தமிழ் தேசியத்தில் தன்னை விட வேறு எவருக்கும் வரலாறு இருக்கக்கூடாது எண்ணம், சுமந்திரன் போன்றோர் கொடுக்கும் குடைச்சல் , தனது பதவியை யாரும் பறித்துவிடுவார்களோ என்ற பயம் போன்றவை அவரைத் தவறிழைக்க வைத்தன.
தந்தை செல்வாவுடன் பழகியவரும் அகிம்சைப் போராட்ட காலத்தின் பின் ஆயுதப்போராளியாகி முள்ளிவாய்க்கால்வரை பயணித்தவருமான ஒருவரை சம்பந்தன் ஐயா வரவழைத்து உரையாடினார். இந்த விடயத்தை அறிந்ததும் மிக முக்கிய புள்ளிகள் மூவர் கலந்துரையாடினர். புலிகளோடு பேசுவது சரி: ஆனால் இவர் போன்றவர்கள் அரசியலுக்குள் வரமால் நாம் பார்த்துக்கொள்ளவேண்டும். என முடிவெடுத்தனர். இலட் சியவாதிகளின் உறவே நீடிக்கும். அவர்கள் தான் இன்னொருவருக்காக உயிரையும் கொடுக்கத் தயராக இருப்பார்கள். சதிகாரர்களின் கூட்டு அவ்வாறில்லை. கூட இருப்பவர்களுக்கே குழிபறிக்கத் தயாராக இருப்பார்கள். தேசியப் பட்டியல் விவகாரம் இதனை உறுதிப்படுத்துகிறது .
மேயர் விடயத்திலேயே மாவை புலிகளைச் சகிக்காதவர்என்றால் வேறு முக்கிய பதவிகளில் யாரையாவது ஏற்பாரா ?
பிரபாகரன் தான் இவரை நன்கு கணிப்பிட்டவர்.தமிழகத்தில் அவர் உண்ணாவிரதம் இருந்தபோது அவரைப்பார்க்க மாவை சென்றார்.எனினும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இது வேடிக்கை பார்க்கும் விடயமல்ல மாவைக்கு உணர்த்தப்பட்டது. அவர் திரும்பி வரும்போது சந்தித்த போராளியை தான் இப்போது அரசியலுக்குள் அண்டவிடக் கூடாதவராக நோக்குகிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக கட்சியின் கட்டுப்பாடு மாவையே விட்டுச் செல்கிறது. ஆனால் சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழும் நிலைதான்.
இக்கட் சி உருவானது மலையகத்தமிழரை நாடற்றவர் களாக்கும் சட்டம் உருவானபோது அதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தவே. ஆனால் மலையகத்தமிழரை வடக்கத்தியான் என்று வசைபாடும் ஒருவரும் கட்சி தலைமையில் கண்வைத்திருக்கிறார்.இதற்கு சுமந்திரனும் ஆதரவு .
மொத்தத்தில் தமிழரசுக் கட் சியை அழிக்க வெளியிலிருந்து யாரும் வரத்தேவையில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி தொடர்ந்து தேய்பிறையாகி வருவதற்கு காரணம் என்ன? தலைமைக்கும் இளைஞருக்குமான இடைவெளி குறித்து ஒருவர் தமிழகத்தில் வெளியிட்ட கருத்து எமக்கு பொருத்தமாக உள்ளது.
“ஒரு போராட்டம் என்பது நீண்ட நெடிய பயணமாக இருக்கலாம். அதில் பலசமயங்களில் வெற்றி கிடைக்காமலே போகலாம் ஆனால் போராட் டத்தின் ஆரம்பப் புள்ளியோடு தங்கள் தலைவர்கள் திரும்பி வந்து விடுவதுதான் இளைஞர்களைக் கோபத்தில் ஆழ்த்துகிறது” தி. முருகன் (ஜூனியர் விகடன் 15.01.2017 பக்கம் 7-கட்டுரை – தலைவனைத் தேடும் இளைஞர்கள்)

Subscribe

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..