பாட்டு படுத்தும் பாடு

இந்த செய்தியை பகிருங்கள்!

சுவிசிலிருந்து சண் தவராஜா

இந்தியத் தலைநகர் புது டில்லியில் விவசாயிகள் ஆரம்பித்த மாபெரும் போராட்டம் 70 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. உள்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாடுகளிலும் போராட்டத்திற்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. விவசாயிகள் பக்கம் அன்றி தாங்கள் எப்போதும் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் பக்கமே என்று தொடர்ச்சியாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் மோடி அரசாங்கம், பெங்களூரில் திஷா ரவி என்ற இளம் பெண்ணைக் கைது செய்திருக்கின்றது. இத்தனைக்கும் அவர் செய்த குற்றம்(?) இணைய வெளியில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவை வெளியிட்டமையே.

இந்தியா போன்ற ஒரு மூன்றாம் உலக நாட்டில், பாசிசத்தின் கூறுகளைக் கொண்டதான ஆட்சி நடைபெறும் நாட்டில் இது போன்ற விடயங்கள் சர்வ சாதாரணமானவை. ஆனால், ‘ஜனநாயகத்தின் தொட்டில்’ என வர்ணிக்கப்படும் ஐரோப்பாவிலேயே நிலைமை அதுதான் என்பதே இன்றைய நடைமுறை யதார்த்தமாக உள்ளது.

பாசிசம் என்பது முதலாம் உலகப் போர்க் காலகட்டத்தில் இத்தாலியில் தோற்றம் பெற்ற ஒரு சித்தாந்தமாக இருந்த போதிலும், அது காலங்காலமாக இருந்து வந்த, இருந்து வருகின்ற ஒன்றே. தீவிர வலதுசாரிகளின் கைகளில் ஆட்சியதிகாரம் செல்கின்ற போது, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தீவிரப்படுத்துவது ஆட்சியாளர்களின் பண்பாக மாறிவிடுகின்றது. மன்னர் காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற ஒரு நிகழ்ச்சித் திட்டமாக அது இருந்த போதிலும் பாசிசம் நிறுவனமயப்பட்டது முதலாம் உலகப் போர்க் காலத்தில் இத்தாலியில் எனலாம். தொடர்ந்து யேர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் அது பேருரு, பேயுருக் கொண்டது. இறுதியில் அது மாபெரும் அழிவைச் சந்தித்த வரலாறை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால், பாசிசத்தின் கூறுகள் இன்னமும் உலகை விட்டு முற்றாக அகன்று விடவில்லை என்பதை உலக நிகழ்வுகள் அன்றாடம் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. அத்தகைய ஒரு நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றிருக்கின்றது.

இசையில் ‘ராப்’ என்றொரு வகை இருக்கின்றது. கறுப்பினத்தவர் மத்தியில் புழக்கத்தில் இருந்த இந்த வகை இசை 1970 களில் அமெரிக்காவில் திடீர் பிரபலம் கண்டது. இரவு விடுதிகளில் மக்களை மகிழ்விக்கும் ஒரு இசை வடிவமாக மாத்திரமன்றி, ஆட்சியாளர்களின் மீதும், அடக்குமுறையாளர்களின் மீதும் கண்டனங்களைப் பதிவு செய்யும் ஒரு கருவியாகவும், மக்கள் போராளிகளைக் கொண்டாடும் ஒரு சாதனமாகவும் அது புத்தெழுச்சி பெற்றது.

இத்தகைய ஒரு ராப் கலைஞர்தான் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பப்லோ ஹாசல். அவர் 2018 ஆம் ஆண்டு முதல் வெளியிட்டுவரும் கருத்துகளுக்காக ஸ்பெயின் நாட்டு உயிர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படுவதற்கு 5 தினங்களுக்கு முன்னர் ‘Ni Filipe VI” என்ற தலைப்பில் ஒரு பாடலை வெளியிட்டார். இதுவரை சுமார் மூன்றரை இலட்சம் பேர் பார்வையிட்டுள்ள இந்தப் பாடலில் தற்போதைய ஸ்பெயின் மன்னரையும், ஆட்சியாளர்களையும் அவர் வெகுவாகச் சாடியிருந்தார்.

தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் ஹாசல், தனது ருவீட்டுகளில் தற்போதைய மன்னரின் தந்தையும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, நாட்டைவிட்டுத் தப்பியோடி, தற்போது அபுதாபியில் தஞ்சமடைந்துள்ள ஸ்பெயின் நாட்டின் முன்னாள் மன்னருமான யுவான் கார்லேசை ‘அவர் ஒரு திருடன்’ என்று வர்ணித்திருந்தார். அப்போது ஒட்டு மொத்த போர்போன் மன்னர் பரம்பரையை அதில் குற்றஞ்சாட்டியிருப்பார்.

சவூதி அரேபியா நாட்டில், மக்காவில் இருந்து மதீனா வரை மேற்கொள்ளப்படவிருந்த விரைவுத் தொடருந்துத் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்காக சவூதி மன்னரிடம் இருந்து 100 மில்லியன் டொலரைக் கையூட்டாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு யுவான் கார்லோஸ் ஆளாகியிருந்தார். சுவிஸ் வங்கிக் கணக்கு ஒன்றின் ஊடாக நடைபெற்ற இந்தப் பணப் பரிமாற்றத்தை சுவிஸ் அரசாங்கம் கண்டுபிடித்து வெளியிட்டதால், தன் மீதான விசாரணைகள் வரக் கூடும் என்ற அச்சத்தில் அவர் நாட்டைவிட்டு வெளியேற நேர்ந்தது.

யுவன் கார்லோஸ் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கு ஆளாகுவது இது முதன்முறை அல்ல. தப்பியோடும் போது கூட அவர் வெறுங் கையோடு போகவும் இல்லை. 50 மில்லியன் ஈரோ பெறுமதியான குளோபல் 6500 ரக விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்திப் பயணித்த அவர், உலகிலேயே விலையுயர்ந்த தங்கு விடுதிகளுள் ஒன்று என வர்ணிக்கப்படும் எமிரேட்ஸ் பலஸ் விடுதியில் தங்கியிருந்ததாக கடந்த வருடம் ஓகஸ்ற் 9 ஆம் திகதி செய்திகள் வெளியாகியிருந்தன.

இத்தகைய ஒருவரைத் ‘திருடன்’ என வர்ணித்ததில் என்ன தவறை நீதிமன்றம் கண்டதோ?

பப்லோ ஹாசல் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுள் அவர் வெளியிட்ட 64 ருவீட்டுகளும் அடங்கும்.

“சவூதி அரேபியாவால் யேமனில் சிறுவர்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றார்கள். போர்போன் மாபியா போன்ற ஜனநாயகவாதிகள்.” (போர்போன் என்பது தற்போதைய மன்னர் பரம்பரையைக் குறிக்கும் சொல்லாகும்)

“(பாஸ்க் தேசியவாதி) யோசேபா அரேகி காவல் துறையின் சித்திரவதையால் கொல்லப்பட்டார்.”

“அனிகோ கபாஸ்காஸ் காவல் துறையால் கொல்லப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகியும், இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.” (அனிகோ காபஸ்காஸ் எனப்படும் கால்பந்தாட்ட ரசிகர், பாஸ்க் தேசியவாதிகள் கூடும் இடமெனக் கருதப்படும் ஒரு இரவு விடுதியின் முன்னால் நின்றபோது சுடப்பட்டார்.)

“ரஸ்ய ஊடுருவலின் பெயரால் தொடரும் போலிச் செய்திகள்” என்ற தலைப்பில் ஸ்பெயின் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘தவறான தகவல்களுக்கு எதிரான தலையீட்டு நடைமுறை’ என்ற சட்டத்தைப் பற்றி நவம்பர் 22 ஆம் திகதிய வீரகேசரி வார வெளியீட்டில் நான் எழுதியிருந்தமை வாசகர்களிள் ஞாபகத்தில் இருக்கக் கூடும். இந்தக் கட்டுரையில் ஐரோப்பிய நாடுகளில் கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடரும் அடக்குமுறைகள் பற்றிக் கூறியிருந்தேன்.

அதன் நீட்சியாக, ஒரு சாட்சியாக பப்லோ ஹாசல் மீதான நீதிமன்றத் தீர்ப்பும், கைதும் அமைந்திருக்கின்றது.

தற்போதைய நிலையில் அவருக்கு 9 மாத சிறைத் தண்டனை கிடைக்கலாம் எனத் தெரிகின்றது. ஆனால், ஆட்சியாளர்களின் எண்ணம் எதுவாக உள்ளது என்பதிலேயே அவரது எதிர்காலம் அடங்கியிருக்கிறது. கைதின் பின்னர் நீதிமன்றில் நிறுத்தப்பட்ட அவருக்குப் பிணை வழங்கப்படுவதை சட்டமா அதிபர் ஆட்சேபிக்காத போதிலும், “பப்லோ ஹாசல் இன்னமும் சமூக விரோதச் சிந்தனையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்” எனக் கூறி அவரைச் சிறையில் தள்ளியிருக்கின்றது நீதிமன்றம். பேய் ஆட்சி செய்தால் சாத்திரங்கள் எதைத் தின்னும் என்பதை அறியாத உலகமா இது?

தனது கைதை எதிர்பார்த்திருந்த பப்லோ ஹாசல் ஸ்பெயின் நாட்டின் கற்றுலோனியா பிராந்தியத்தில் உள்ள தனது சொந்த ஊரான லைடா நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் தனது ஆதரவாளர்களோடு சென்று தங்கியிருந்தார். காலையிலேயே 20 வாகனங்களில் சென்ற சுமார் 50 வரையான காவல் துறையினர், ஆதரவாளர்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பப்லோ ஹாசலைக் கைது செய்தனர். “அவர்களால் எங்களை எப்போதும் மௌனிக்கச் செய்ய முடியாது. பாசிச ஆட்சி ஒழியட்டும்” என முழங்கியவாறே பப்லோ ஹாசல் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறினார்.

ஹாசலின் கைது ஸ்பெயினிலும், உலகளாவிய அடிப்படையிலும் பலத்த கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது. கற்றுலோனியா பிராந்தியம், தலைநகர் மட்ரிட் மற்றும் ஸ்பெயின் நாட்டின் மூன்றாவது பெரிய நகரான வலன்சியா, அவரது சொந்த இடமான லைடா நகர் உள்ளிட்ட பல இடங்களில் மிகப் பாரிய மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கும் காவல் துறையினருக்கும் இடையில் மோதல்களும் நடைபெற்றுள்ளன. ஒரு சில கைதுகளும் அரங்கேறியுள்ளன. “ஸ்பெயின் ஒரு பாசிச நாடு”, “போர்போன்கள் திருடர்கள்” ஆகிய வசனங்கள் ருவிட்டரில் பிரபலமாகியுமுள்ளன.

1978 ஆல் ஆட்சியில் இருந்த பிரான்சிஸ்கோ பிராங்கோவின் பாசிச ஆட்சி வீழ்த்தப்பட்டதன் பின்னான காலகட்டத்தில் கைது செய்யப்பட்ட முதலாவது கலைஞராக பப்லோ ஹாசல் உள்ளார். இந்நிலையில் நாடகக் கலைஞர்கள், திரைப்படக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் எனப் பல்வேறு வகையினரும் அவருக்கு ஆதரவை வெளியிட்டு வருகின்றனர். “இது ஸ்பெயின் நாட்டில் கருத்துச் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப் பாரிய சவால்” என ஹாசலின் கைதை அவர்கள் வர்ணித்துள்ளனர். 300 கலைஞர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் “கருத்துச் சுதந்திரம் இல்லாமல் ஜனநாயகம் இல்லை” எனத் தெரிவித்துள்ளனர்.

பப்லோ ஹாசல் கைது செய்யப்பட்டமையைக் கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை “இது ஒரு பயங்கரமான செய்தி” எனக் கூறியுள்ளது.

இத்தனைக்கும் ஸ்பெயின் நாட்டில் ஆட்சியதிகாரத்தில் இருப்பது ஸ்பெயின் சோசலிசக் கட்சி. ஒரு கலைஞனின் கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க முடியாத சோசலிசம் எத்தகையது? கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்ற முடியாத கட்சி தனது பெயரில் சோசலிசம் என்ற பதத்தை வைத்திருப்பதற்குத் தகுதியானதுதானா என்பன போன்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

விமர்சனங்களுக்கு ஆளாகிவரும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான சட்டங்கள் காரணமாக, நடப்பு அரசாங்கம் தனது குற்றவியல் சட்டக் கோவை மாற்றியமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ள போதிலும், அதற்கான கால வரையறை எதனையும் தெரிவிக்கவில்லை.

தாம் விரும்பிய, தமக்குச் சரியெனப்பட்ட கருத்தைப் பேசினார்கள், பாடினார்கள் என்பதற்காக ஸ்பெயினில் வேட்டையாடப்படும் முதல் நபர் ஹாசல் இல்லை. 2018 காலகட்டத்தில் அரசாங்கத்தைக் கண்டிக்கும் விதத்தில் பாடல்களை எழுதிய மற்றொரு ராப் பாடகரான வால்ரொனிக் கைதில் இருந்து தப்புவதற்காக பெல்ஜியம் நாட்டில் தஞ்சமடைந்து உள்ளார். கற்றுலோனிய சுதந்திரத்துக்கு ஆதரவான இவர் பொதுவுடமைச் சிந்தாந்தந்தைத் ஏற்றுக் கொண்டவரும், வலது சாரிச் சிந்தாந்தத்தை எதிர்ப்பவரும் ஆவார். இவரை நாடு கடத்தும் கோரிக்கையை முன்வைத்து ஸ்பெயின் அரசாங்கம் முயற்சித்து வரும் நிலையில், அவரது நாடு கடத்தலுக்கு எதிராக பெல்ஜிய நீதித் துறையும், ஜனநாயகவாதிகளும் போராடி வருகின்றனர்.

ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எந்தவிதமான அடக்கு முறைகளையும் மக்கள் மீது மேற்கொள்வதற்குத் தயரான நிலையிலேயே ஆட்சியாளர்கள் உள்ளார்கள் என்பதற்கு ஸ்பெயின் உட்பட உலகின் பல நாடுகளிலும் அநேக எடுத்துக் காட்டுகள் உள்ளன. அதேவேளை, இத்தகைய அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போரும், ஜனநாயக விழுமியங்களைக் காப்பாற்றிக் கொள்ள தமது உயிரைக் கூட விலையாகத் தரத் துணிந்த கொள்கைவாதிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றார்கள்.

“யூலியஸ் சீசர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்” என்பது ஐரோப்பாவில் நிலவும் பொதுவான ஒரு சொலவடை. இந்தக் கருத்து காலங்கடந்தது என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுவிட்ட போதிலும், அந்தக் கருத்தை தமது ஆட்சியின் அடிப்படையாகக் கொள்ளும் பிற்போக்குத் தனமான ஆட்சியாளர்களும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டேயிருக்கின்றார்கள் என்பதற்கு ஸ்பெயின் நிலைவரம் ஒரு சரியான எடுத்துக்காட்டு.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..