பிரான்சில் மாவீரர்நாள் நிகழ்வுகள்

இந்த செய்தியை பகிருங்கள்!

தில்லை (பிரான்ஸ்)

பிரெஞ்சு மக்கள் பிரதிநிதிகளின் பேராதரவுடன், பிரான்சில் தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. கோவிட்-19 நோய்ப்பரவலுக்கெதிரான உள்ளிருப்பு நிலையை கருத்தில் கொண்டு, பாரிஸ் நகரின் வெவ்வேறு பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்விடங்களில், சமகாலத்தில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவு கூரப்பட்டனர்.

பாரில் நகரில், தமிழ் மக்களின் பொருளாதார மையமாக திகழும் லா சப்பல் (La Chapelle) பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், சமூக இடைவெளியை பேணிய நிலையில், கணிசமான அளவில் மக்கள் பங்கெடுத்தனர். இங்கு ஈகைச்சுடரினை மாவீரர் கப்டன் முல்லைச்செழியனின் சகோதரன் எ.றெக்சன் ஏற்றி வைத்தார்.
பிரதான வீதியை மையப்படுத்தி நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பாரிஸ் நகர நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்ததுடன், சிறப்பு காவல்துறை அணியின் [CRS] பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

சம காலத்திலேயே, புறநகர் பகுதியான சார்சல் (Sarcelles) பகுதியில் உள்ள நெல்சன் மண்டேலா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் மாவீரன் லெப்.சங்கரின் நினைவுத்தூபியில் நடைபெற்ற நிகழ்வில், தமிழீழ தேசியக்கொடியை பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. François Pupponi ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை சார்சல் தமிழ் சங்க தலைவர் திரு ம.டக்ளஸ் ஏற்றிவைத்தார்.
இந்நிகழ்வுக்கு சார்சல் நகரபிதா திரு.Patrick Haddad உட்பட, பல பிரமுகர்களும் பொதுமக்களும் பங்குபற்றியிருந்தனர்.

இதே வேளை கடலில் காவியமான மாவீரர்களை நினைவுகூர்ந்து, செவரோன் (Séveron) பகுதியில், நீர்நிலையில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. செவரோன் நகரசபையின் அனுமதியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், ஈகைச்சுடரினை மாவீரர் கடற்புலி மேஜர் அற்புதத்தின் சகோதரன் கதிர் ஏற்றிவைத்தார்.

மேலும் பொதுநிகழ்வுகளில் பங்குபற்ற முடியாத பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள், தமது வீடுகளில் ஈகைச்சுடர்களை ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
தாயகத்தில் மாவீரர்களை நினைவுகூர நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள இவ்வேளையில், போரில் வீழ்ந்த வீரர்களை மதிக்கும் மனப்பாங்குடைய பிரெஞ்சு மக்கள், தமிழீழ மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு வழங்கிய அனுசரணை தமிழ் மக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..