வரலாற்றை திரிபுபடுத்த முனையும் முன்னாள் ஆயுதக்குழு உறுப்பினர்கள்!

இந்த செய்தியை பகிருங்கள்!

அஞ்ஞானி

ஒவ்வொரு இளைஞனும் தங்கள் போராட்டப் பங்களிப்பை வழங்க ஓவ்வொரு இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தனர்.தங்கள் தங்கள் இயக்கத்தினுள் என்ன நடந்தது என்பதை மறந்து புலிகளே மோசமானவர்கள் என நிறுவ முன்னாள் புளொட் மற்றும் ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் தலைகீழாக முயன்று வருகின்றனர். அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வரலாறு தெரியாது தானே என்ற நம்பிக்கையில் தான் தங்கள் நடவடிக்கையில் இவர்கள் தீவிரமாக உள்ளனர்.
கடந்த 10 திகதி வெருகல் படுகொலை நினைவு நாள் என்ற பெயரில் சமூக அமைப்புகள் அதனை நடத்துவதாக விளம்பரப்படுத்தப்பட்டது.


முதலில் ஆயுத மோதல் என்பதற்கும் படுகொலை என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லை இந்தப் புத்திஜீவிகளுக்கு. இந்தியாவில் ஆயுதப் பயிற்சி பெற்று அங்கேயே விலகிக்கொண்ட முன்னாள் புளொட் இயக்க உறுப்பினரும் ,தற்போதைய கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைப்பீட விரிவுரையாளருமான களுதாவளையைச் சேர்ந்த சுந்தரம்பிள்ளை சீவரத்தினமும் (யோகன்) இவர்களில் ஒருவர். இவர் சார்ந்த இயக்கமான புளொட் மாலைதீவைத் தவிர வேறு எங்கும் சில மணிநேரம் கூட கட்டுப்பாட்டில் வைத்திருந்த வரலாறு இல்லை. ஆகையால் சமர் என்பது இவருக்குப் புரியாது.
வெருகல் ஆற்றின் இரு கரைகளிலும் இருந்து மோதிக்கொண்ட இருதரப்பினரின் கைகளிலும் ஆயுதம் இருந்தது. எந்த ஆயுதமும் உயிரைக் குடிக்கும் என்பது இந்த விரிவுரையாளருக்குத் தெரியாமல் போனது துரதிஷ்டமே. இரு தரப்பினருமே தங்களால் இயன்றவரை போராடினார்கள். காயங்கள் ஏற்பட்டன, உயிரிழப்பு ஏற்பட்டது. சரணடைந்த கருணா தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்பதை வசதியாக மறந்து விட்டார் சீவரத்தினம்.
எவ்வாறிருந்தாலும் இந்த முரண்பாட்டில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவது என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம். அதனை மறுக்க முடியாது.ஆனால் சமூக அமைப்புக்களின் சார்பில் இந் நிகழ்வை நடத்துவதாகக் குறிப்பிட்ட விரிவுரையாளர் தனது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ரவீந்திரநாத் ,தம்பையா ,மாணவி தனுஷ்கோடி பிறேமினியின் உறவுகளின் துயர் பொருட்படுத்தத் தக்கவையல்ல என்ற முடிவுக்கு ஏன் வந்தார்? இது வரைக்கும் எங்காவது இவர்களை நினைவு கூர
ஏதாவது ஏற்பாட் டைச் செய்திராத இவர் நான் நடுநிலையுடன் பேச முயற்சிக்கின்றேன் என்பது சுத்த அபத்தம் .
இவர்களில் எவருமே ஆயுதம் தாங்கியவர்கள் அல்ல என்பது தனக்குத் தெரியாது என்பது போலவும் வெருகலில் கருணா தரப்பினர் ஆயுதமின்றி வெள்ளைக் கொடியுடன் தான் நின்றனர் என்ற மாதிரியும் நிரூபிக்க முயல்கிறார்.
இவருக்கு மனச்சாட்சி இருந்தால் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபின் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பிறேமினியின் இடத்தில் தனது மகளை ஒரு கணமேதும் வைத்துச் சிந்தித்திருப்பார்.
சுமார் 40 ஆயுத அமைப்புக்கள் தோன்றிய போதும் கிழக்கில் இருந்து எவையும் உருவாகவில்லை; அங்கிருந்து (வடக்கிலிருந்து) வந்த குழுக்களிலேயே இங்குள்ள தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டனர் என்பதன் மூலம் இந்த விரிவுரையாளர் வரலாற்றை மாற்றியமைக்க முயல்கிறார்.
இரா. பரமதேவாவுக்கும் பிரபாகரனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பை ஆரம்பித்தார் பரமதேவா. துரதிஷ்டவசமாக இவரும் இவரைச் சேர்ந்த சிலரும் (நடவடிக்கைகளில் ஈடு பட்டவர்கள்) கைதாக நேர்ந்தது. ஆனால் இவரோடு தொடர்புபட்ட பலர் அதே உணர்வுடன் இருந்தனர். உண்மையில் மட்டக்களப்பு சிறையுடைப்பின் முக்கிய பங்காளி இவர்தான். தப்பிச் செல்வதற்கான தோணிகள் முதலானவை முதற்கொண்டு இவரது தொடர்பினாலேயே சாத்தியமாகின. (ஆனால் உரிமை கோரியவை வேறு மூன்று இயக்கங்கள்) தான் விடுதலையாவதற்கு சில நாட்களே உள்ளன என்ற நிலையிலும் புலிகள் இயக்கத்தினரைக் கொண்டு செல்லும் பொறுப்புத்தானே ஏற்றதால் இவரும் சிறையிலிருந்து போகவேண்டி ஏற்பட்டது .
புலிகள் இயக்கத்திலேயே இணைவது என்பது இவரும் இவரது நண்பர் ரஞ்சனும் எடுத்த முடிவு (பொத்துவில் எம். பி கனகரத்தினத்தின் மகன் தான் ரஞ்சன். இயக்கப் பெயர் சைமன்)
அடுத்தது தமிழீழ கழுகுகள் படை .இந்த இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான ராஜ்மோகனை இந்த விரிவுரையாளர் முன்னர் அங்கம் வகித்த புளொட் இயக்கமே காணாமற் செய்தது.
மூன்றாவது தமிழீழ நாகபடை. இதன் நிறுவனர்கள் ஒட்டமாவடியைச் சேர்ந்தவர்களான ஜுனைதீன், தவ்பீக் , பதூர்தீன் (சுப்பையா லேன்) ஆகிய மூன்று முஸ்லீம் இளைஞர்களும் மற்றும் ஸ்ரீபத்மன் (புளியந்தீவு), கணேசமூர்த்தி பையா (மாமாங்கம்) ,சிமிட்டி தயா (புளியந்தீவு),இராசநாயகம் இராஜேந்திரன் (சின்னவன் – ஏறாவூர்), ஐயா – பையாவின் மருமகன் (மாமாங்கம் ), ஜூட் பத்மநாதன்( புளியந்தீவு ) , கண்ணன் (முகத்துவாரம்),
சுபாஷ் (தாமரைக்கேணி )உள்ளிட்ட சிலர். இதில் ஜுனைதீனும் சுபாஷ்சும் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டனர் .
இந்த ஜுனைதீன்தான் முதல் முஸ்லீம் மாவீரர்
நான்காவது ` ஈஸ்டன் குரூப்` என்றழைக்கப்பட்ட குழு. மட்டக்களப்பு கச்சேரிக்குள் விவசாயி களிடமிருந்து மீளப் பெறப்பட்ட வேட்டைத் துப்பாக்கிகளை வைத்திருந்தார்கள். இதனை கைப்பற்றிய இக் குழு தோணிகள் மூலமாக ஆற்று வழியாகக் கொண்டு சென்றது. குறிப்பிட்ட இலக்கை அடையமுன்னர் விடிந்து விட்டது. எனவே இதனை ஆற்றங்கரையோரமாகப் புதைத்தது. இந்த ஆயுதங்களை புளொட் அபகரித்தது. ஆயுதங்களை புளொட் திருடியதும்,கச்சேரிக்குள் புகுந்தோர் தேடப்பட்டதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அவர்கள் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணைந்து கொண்டனர்.
இக் குழுவில் கப்டன் கரன்( கல்லடி),கப்டன் முத்துசாமி (களுவாஞ்சிக்குடி),லெப் .மொட்டைக் கஜன்(புளியந்தீவு) . லெப் உமாராம்(கல்லடி), லெப் பயஸ் (நாவற்குடா), லெப்.ஈசன் (வந்தாறுமூலை) ஆகியோர் வீரச்சாவெய்தி னர். இவ்வாறு வரலாறு இருக்க மட்டக்களப்பில் எந்த இயக்கமும் சுயமாக உருவாகவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகிறார் இவர்.
புலிகளில் இணைந்து கொண்ட பரமதேவா,ரஞ்சன் முதலானோர் இந்தியா வழங்கிய பயிற்சியினையும் பெற்றுக்கொண்டனர் (முதலாவது முகாம்) . பரமதேவா பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த பிரபாகரன் பயிற்சி முடித்து அவர் வந்ததும் ஒரு தலைமைக்குரிய பண்பும், இலட்சிய உறுதியும் கொண்டவராக இவரை இனங்கண்டார். கிழக்குக்கான தலைமை அங்கேயே உருவாகவேண்டும் என்று அடிக்கடி கூறும் அவர் தனது எண்ணத்துக்குப் பொருத்தமானவராக இவர் இருப்பதையிட்டுத் திருப்தி கொண்டார்.
ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையத் தாக்குதலில் பரமதேவா மிகத் திறமையாகச் செயற்பட்டார். இத் தாக்குதல் முடிந்ததும் மட்டக்களப்புக்குப் பொறுப்பாக அனுப்பப்பட்ட போராளியிடம் ” பரமதேவாவைக் கூட்டிக்கொண்டு போங்கள்; ஓரிரு தாக்குதலின் பின்னர் அவரிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்.தனியாக இயக்கம் தொடங்கவும் அவருக்கு அனுமதியுண்டு“ எனக் குறிப்பிட்டார் மாத்தையா.
இதுவரை எவருக்குமே வழங்கப்படாத அனுமதி இது. மட்டக்களப்புக்கான கடற்பயணம் தாமதமாகவே முல்லைத்தீவில் ஒரு வாடியில் இவர்கள் தங்கியிருக்க வேண்டியிருந்தது. அச் சமயம் அப்போராளி பரமதேவா விடம் “ஓரிரு சண்டைகளின் பின்னர் உங்களிடம் பொறுப்பை ஒப்படைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளேன்.தனியாக இயக்கம் தொடங்கவும் உங்களுக்கு அனுமதி உண்டு எனவும் சொல்லியிருக்கிறார்களே“ எனக் கேட்டார்.
இதற்கு “தம்பி (பிரபாகரன்) என்னிடம் இது பற்றி குறிப்பிட்டார். அதற்கு நான் உங்களுக்கும் எனக்குமான புரிந்துணர்வு தனித்துவமானது . இதனைப்போல நாளைக்குப் புதிதாக என்னுடன் இணைந்து கொள்பவர்களுக்கும் இருக்குமென்று சொல்லமுடியாது.நீங்கள் தேவையான ஆயுதங்கள்,ரவைகள் மற்றும் ஏனைய உதவிகளைத்தான் செய்யமுடியும். புரிந்துணர்வு என்பதைப் போராட்டத்தில் புதியவர்களான அவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது. நாளைக்கு இது பெரும் ரத்தக்களரியில் முடியும். எனக்கு நீங்கள் சரியான தலைவராகத் தெரிகிறீர்கள்.உங்கள் தலைமைக்கு கீழேயே நான் போராடுவேன் எனக் கூறி அன்பாக மறுத்து விட்டேன்” என்று கூறினார் பரமதேவா .
தமிழரின் துரதிஷ்டம் மட்டக்களப்பில் நடந்தமுதல் தாக்குதலிலேயே பரமதேவாவை இழக்கவேண்டி ஏற்பட்டது. காயமடைந்த நிலையில் இருந்த அவரையும் ரவி (வாமதேவனையையும்) வாகனத்தின் அருகிலேயே விட்டு விட்டு ஏனையோர் பொலிஸ் நிலைய வளாகத்தினுள் புகுந்தனர்.எனினும் எதிர்பார்த்த மாதிரி சண்டை நடைபெற வில்லை. பாதகமாகவே போய்க்கொண்டிருந்தது.பின் வாங்கிக்கொண்டு காயமடைந்தவர்களையும் ஏற்றிக்கொண்டு செல்வோமென முடிவெடுக்கப்பட்டது. பரமதேவாவிடம் சென்ற போது “நான் பாரமானவன்; என்னைத் தூக்கிக்கொண்டு போவது சாத்தியமில்லை. நிலைமையை உணர்ந்து நானும் ரவியும் ஏற்கெனவே சைனட் உட்கொண்டு. விட்டோம் இனி எங்களோடு நேரத்தைச் செலவழிப்பதில் பயனில்லை. ஒன்று மட்டும் செய்யுங்கள்.அம்மாவிடம் போய்ச் சொல்லுங்கள் உங்கள் மகன் சண்டையில் தான் செத்தானென்று . அண்ணர் (வாசுதேவ) புளொட் டில் இருக்கிறார் ஆனபடியால் வேற மாதிரி கதைகள் வரலாம். சீக்கிரம் போங்கள் ” என்றபடியே உயிரைவிட்டுக்கொண்டிருந்தார். ரவி ஏற்கெனவே உயிர் இழந்து விட்டார்.
இந்த வார்த்தைகளை சொல்லத்தான் மனவலிமையுடன் அவர் காத்துக்கொண்டிருந்தார் என்பதை உணரமுடிந்தது.
பயிற்சி முடித்து வந்த போராளிகளை முதலில் வீட்டுக்கு அனுப்பி பெற்றோ ரைச் சந்திக்க வைப்பது வழக்கமாக இருந்தது. பரமதேவாவின் அம்மா இருப்பதோ கல்லடியிலுள்ள இராணுவத்தினரின் பிரதான முகாமுக்கு அருகில் (சகோதரி வீட்டில்) .எனவே அமிர்தகழியிலேயோ வேறேங்கோதான் தாயா ரைச் சந்திக்கவேண்டியிருக்கும். இந்த நிலமையைச் சொல்லி அவரது முடிவைக் கேட்டார் ஒரு போராளி. அதற்கு பரம தேவா சொன்ன பதில் “நான் இந்த ஆயுதப் போராட்டத்தில் ஈடு பட்டபின் என்னை ஒரு கைதியாகவே அம்மா பார்த்திருக்கிறார். எனவே இந்த மண்ணில் நடக்கும் தாக்குதலில் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு ஆயுதத்துடன் வீரனாகத் தான் அம்மாவைப் பார்க்க விரும்புகிறேன் அதுவரை பொறுத்திருக்கிறேன்” என்றார். ஆனால் அவரது கனவுகள் ……..

மரணிக்கும் தறுவாயிலும் இயக்கத்துக்குக் கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்பதற்காக அவர் சொன்ன வார்த்தைகள்… அதிலும் புளொட் பற்றி அவர் கொண்டிருந்த கருத்துக்கள்; எத்தனை தீர்க்கதரிசனமானவை என்பதை ஸ்டாலின் ஞானமும்,சீவரத்தினமும் நிரூபித்துக் காட்டுகின்றனர். (இன்னும் சில புத்தி ஜீவிகள் பட்டியல் உண்டு )
சீவரத்தினம் சகோதரப்படுகொலைகளை தன் கையாலே ஆரம்பித்து வைத்தவர் பிரபாகரன் என்று சொல்கிறார்.இதுவும் தவறான தகவல். தமது புளொட்டுக்குள் என்ன நடந்தது என்றே தெரியாதவர்கள் புலிகள் பற்றி வகுப்பு எடுக்கின்றனர். அதற்கு முன்னரே வரலாற்றில் ஒரு சம்பவம் நடந்தது. ஆனால் பிரபாகரன் சம்பந்தப்படவில்லை. அந்தக் காலத்தைப் பற்றி இந்த விரிவுரையாளருக்கு விபரிப்பது சிரமம் .மேலும் மைக்கலின் விடயம் ஒரு ஒழுக்காற்று நடவடிக்கை. இது தனியே பிரபாகரன் மட்டும் எடுத்த முடிவல்ல.
வந்தாறுமூலையைச் சேர்ந்த கைலாயத்தாரின் மகன் சுரேஷ் (இயக்கப் பெயர் பிரசன்னா) பாண்டிருப்பைச் சேர்ந்த விமல்ராஜ் ஆகியோர் மீது எடுக்கப்பட்டதாக கூறும் நடவடிக்கைகள் இதேபோலத்தான் மேற்கொள்ளப்பட்டன. வெருகலில் மட்டக்களப்பு பக்கமாக நின்று படைநடத்தியவரைக் கேட்டால் இது பற்றி கூறுவார் (இந்தக் காரணங்களை விட பல மடங்கு……… )

மேலும் இந் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் ஈரோஸ் உறுப்பினரும்,தமிழர் தளம் பத்திரிகையின் ஆசிரியருமான மணிசேகரம் தராக்கி (சிவராம்) நடேசன் முதலானோரின் அஞ்சலி நிகழ்வுகளை இதே மக்கள் அமைப்பின் பெயரில் நடத்தத் தயாராக இருக்கின்றாரா என்பதை வெளிப்படுத்தினால் நல்லது.
1980 ல் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கு பின் உருவான பாதுகாப்பு பேரவை என்ற இயக்கத்தின் அமைப்பாளர்களின் ஒருவரான நெப்போலியன் மணிசேகரம் சார்ந்த ஈரோஸ் இயக்கத்தால் மலையகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார் அல்லது காணாமற் செய்யப்பட்டார் என்பது பற்றியும் , சர்வோதய அமைப்பின் தலைவர் கந்தசாமி என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டார் என்பதையும் இன்னொரு நினைவேந்தல் நிகழ்வில் சொல்வாரென எதிர்பார்க்கின்றோம் .

இந்த செய்தியை பகிருங்கள்!

scroll to top

இந்த செய்தியை பகிருங்கள்!

இந்த செய்தியை நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிருங்கள்..