புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கும் ஜே.வி.பியால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

 இலங்கையில் நடந்து வரும் போராட்டங்களுடன், நாடாளுமன்றத்தில் மூன்று நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அந்த கட்சிக்கு சிறந்த ஒருங்கிணைப்பு பலம் இருப்பதாகவும் இந்திய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

இலங்கையில் நடக்கும் போராட்டங்களுடன் மக்கள் விடுதலை முன்னணிக்கு தொடர்புள்ளது. 20, 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஜே.வி.பி என்பது மிகவும் கொடூரமான வன்முறை அமைப்பாக அறியப்பட்டது.

அதன் பின்னர் அந்த அமைப்பு அடக்கப்பட்டது. இன்று மூன்று நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. சிறிய கட்சி என்றாலும் நல்ல அமைப்பு. புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முயற்சித்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வளர்ச்சி இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தானது. அந்த நாடு எமது எல்லையில் உள்ளது. அது ஒரு தீவு. இந்தியாவை எதிர்க்கும் ஏராளமான மக்கள் உள்ளனர். சீனா, மியன்மார், பாகிஸ்தான் ஆகியன அங்கு நிலைக்கொண்டுள்ளன.

இந்தியா இதனை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளது என நான் நினைக்கின்றேன். இந்த பிரச்சினை இந்தியாவுக்கு மிகப் பெரியளவிலான தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுதல் என்பதால், தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேவையான நடவடிக்கைகளை தற்போதே எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள். தேர்தலில் எந்த சர்ச்சையும் இருக்கவில்லை. அவர்கள் கொண்டாடப்பட்டவர்கள்.

இராணுவ ஆட்சியாளர்கள் அல்ல. ஒரு குழுவால் ஏன் அவர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். பதவி விலகுவதற்கு அவர்களுக்கு உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமர் பதவிகளில் இருந்து ராஜபக்சவினர் விலகி சென்றுள்ளனர். இராணுவத்தை அனுப்பி வைக்குமாறு கூட அவர்கள் கேட்டிருக்கலாம்.

அவர்கள் கேட்டிருந்தால், இந்திய இராணுவத்தை அனுப்பி இருக்கலாம். ஆனால் அவர்கள் அழைக்காமல் இராணுவத்தை தரையிறக்கி மற்றுமொரு நாட்டை கைப்பற்ற முடியாது.

இந்தியா போன்ற நாட்டை தலையிடுட்டு இராணுவத்தை அனுப்பி அமைதியை நிலைநாட்டுமாறு இலங்கை மக்கள் கோரிக்கை விடுக்கும் வரை காத்திருக்கின்றோம். அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எந்த ஒரு காரணமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், அது தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இலங்கை சம்பந்தமாக அமெரிக்கா இன்று அல்லது நாளை அறிக்கை ஒன்றை வெளியிடும் எனவும் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.