கோட்டாபயவை மாலைதீவு அரசாங்கம் எவ்வாறு வரவழைத்தது - நாடாளுமன்றில் பிரேரணை!

 சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவை மாலைதீவு அரசாங்கம் எப்படி வரவழைத்து என்பதை தெளிவுப்படுத்துமாறு மாலைதீவு தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாகவும் மாலைதீவு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Dunya Maumoon தெரிவித்துள்ளார்.

மேலும் மாலைதீவு அரசாங்கம், எப்படி கோட்டாபய ராஜபக்சவை நாட்டுக்கு அழைத்து வர அனுமதித்தது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், 

“இலங்கை மக்களின் உணர்வுகளைப் பற்றி மாலைதீவு அரசாங்கம் அக்கறை கொள்ளாதது மிகவும் ஏமாற்றமளிப்பதாக அமைந்துள்ளது. ஆகவே நாடாளுமன்றத்தில் பிரேரணையை கொண்டு வருவது மிக சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என கருதுகிறேன்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளேன். இலங்கை பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக நெருக்கடிகளை சந்தித்துள்ளது.

மக்கள், தொழில், உணவு, எரிபொருள் இன்றி வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாமல் இருக்கின்றனர். இலங்கை மக்களின் அபிலாஷைகளை மாலைதீவு மக்கள் மதிக்கின்றனர்.

அவர்கள் தற்போதைய அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக செயற்பட்டு வருகின்றனர். அதனை நாம் உணர்வு பூர்வமானதாக கருத வேண்டும். இலங்கை மக்கள் தமது எதிர்பார்ப்புகளை வெளியிப்படுத்தியுள்ளனர் எனவும் Dunya Maumoon கூறியுள்ளார்.

இலங்கையில் இருந்து விமானப்படை விமானத்தின் மூலம் கோட்டாபய மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து இன்று சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.