ஆர்ப்பாட்டக்காரர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர்: இராணுவ ஊடகப் பேச்சாளர் தகவல்

 கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள்

நேற்று மாலை பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் நாடாளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இரண்டு இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினரிடமும் இருந்து இரண்டு தானியங்கி T-56 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்."இராணுவ வீரர்கள் இரும்பு மற்றும் மரக் கம்புகளால் தாக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் தலை மற்றும் முகங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,'' எனவும் சுட்டிக்காட்டினார்.

வன்முறைகள் பரவும் அபாயம்


திருடப்பட்ட துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வன்முறைகள் பரவக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன மேலும் வலியுறுத்தியுள்ளார்.

நாடளுமன்றத்திற்கு அருகாமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் வினவிய போது, ​​இராணுவ ஊடகப் பேச்சாளர் அந்த செய்திகளை மறுத்துள்ளார்.

காயமடைந்த அதிகாரிகள் ஆரம்பத்தில் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், தற்போது அவர்கள் நிலையாக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றதிற்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற சம்பவத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.