மரண அச்சத்தில் தப்பியோடிய கோட்டாபய! போராட்டகாரர்கள் விடுத்துள்ள செய்தி!

சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக உள்ளதாக காலி முகத் திடல் கோட்டா கோ கம போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

காலி முகத்திடலில் வைத்து கருத்து வெளியிட்ட அனைத்து மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, மரண அச்சத்தில் தப்பிச் சென்றதன் மூலம் கோட்டாபய ராஜபக்ஸ மக்கள் முன்னிலையில் தோல்வி அடைந்துவிட்டார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என்பதே எமது அடிப்படை கோரிக்கையாகவுள்ளது.

அரசியலமைப்பு ஏற்பாடுகளின் பெயரால், நாடாளுமன்றத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளின் குண்டர்களுக்கு தமக்கு ஏற்றால் போல் செயற்படுவதற்கு அனுமதிக்க முடியாது.

காலி முகத்திடல் போராட்டகாரர்கள் என்ற அடிப்படையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஆறு யோசனைகளை உள்ளடக்கிய செயற்பாட்டு திட்டமொன்றை முன்வைத்துள்ளோம்.

அதில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். போராட்டகாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும் அழுத்தம் கொடுக்கும் வகையிலும் தலையீடுகளுடன் கூடிய செயற்பாட்டு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்த விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்பின்னர் பொதுமக்களின் பேரவை தொடர்பான முன்மொழிவொன்றையும் முன்வைத்துள்ளோம்.

இந்த நாட்டு மக்கள் நாடாளுமன்றத்துடன் தொடர்புகளை வைத்திருக்கும் வகையில் முறைமையொன்று இதன் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த செயற்றிட்டத்தின் கீழ் அரசியலமைப்பில் சில சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். தேர்தல் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இதுபோன்ற பல்வேறு விடயங்கள் உள்ளன.

இதுபோன்ற விடயங்கள் முன்னெடுக்கப்படும் பட்சத்திலேயே நீண்டகால வெற்றியை பெற்றுக்கொள்ள முடியும்.

அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பதவி விலகல்களின் பின்னரே அனைத்து செயற்பாடுகளும் இடம்பெறும்” என்றார்.