ரஞ்சன் ராமநாயக்க 7 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது- விஜயதாச ராஜபக்ஷ

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த வெள்ளியன்று பொது மன்னிப்பு வழங்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 7 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிபந்தனைகளுடன் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமையே இதற்காக காரணம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எந்தவொரு அரசியல்வாதியும் 6 மாத காலத்திற்கு மேல் சிறையிலடைக்கப்பட்டால், அவரது குடியுரிமை 7 வருடங்களுக்கு இரத்து செய்யப்படும். 

எனினும் அரசியலமைப்பின் 34 2 பிரிவின் கீழ் பொது மன்னிப்பு வழங்கப்பட்டால், ஜனநாயக உரிமை வழங்கப்படும். எனினும், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அரசியலமைப்பின் 34 1 ஈ பிரிவின்படியே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 7 வருடங்களுக்கு அவரால் தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது.

எவ்வாறிருப்பினும் தேவையான சந்தர்ப்பங்களில் ரஞ்சன் ராமநாயக்கவை தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கலாம் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இவ்வாறான நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பே வழங்கப்பட்டிருந்தது. பின்னர் அவருக்கு முழுமையான பொது மன்னிப்பு வழங்கப்பட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்ததையும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
Published from Blogger Prime Android App