இலங்கை பொதுப்போக்குவரத்தில் இணையும் மின்சார வாகனங்கள்!

மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி மற்றும் பேருந்துகளை நாட்டின் போக்குவரத்தில் இணைப்பதற்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளது.
  
இது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் ஐக்கிய நாடுகளின் அபிருத்திக்கான வேலைத்திட்டத்துடன் போக்குரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

நாட்டில் உள்ள 10 இலட்சத்துக்கும் அதிகமான முச்சக்கர வண்டிகளை மின்சாரத்தில் இயங்கும் கட்டமைப்புக்கு மாற்றம் செய்வதன் ஊடாக எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதுடன் பயணிகளுக்கு இலகுவான கட்டணத்தில் போக்குவரத்து செய்ய முடியும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். 

இந்த வருடத்துக்குள் 3000 முச்சக்கர வண்டிகளை மின்சாரத்தில் இயங்கும் கட்டமைப்புக்கு மாற்றம் செய்யவும் அதற்கான முறைமை தயாரிப்பது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலில் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்காக 3 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதுதவிர, கொழும்பு நகரில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் கனிய எண்ணெய் பிரச்சினை மற்றும் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்து கொள்வதற்காக உடனடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Published from Blogger Prime Android App