பெரும் போகத்தில் இரசாயன, சேதன உரங்கள் பயன்படுத்தப்படும் – விவசாய அமைச்சு

எதிர்வரும் பெரும் போகத்தில் இரசாயன மற்றும் சேதன உரங்களின் கலவையைப் பயன்படுத்த இலங்கை திட்டமிட்டுள்ளது.

நெல் பயிர்ச்செய்கையில் 70% இரசாயன உரங்களையும் 30% சேதன உரங்களையும் பயன்படுத்துவதற்கு பத்தலகொட அரிசி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள் அமோக வெற்றி பெற்றுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பெரும் போகத்தில் நியாயமான விளைச்சல் கிடைக்காததால், உள்ளூர் உணவு உற்பத்தியில் பாரிய தாக்கம் ஏற்பட்டதுடன், நாட்டில் உணவுப் பணவீக்கம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சேதன உரங்களை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையால் அறுவடை குறைந்துள்ளது.

கொள்கை காரணமாக கடந்த ஆண்டு பெரும் போக நெல் அறுவடை 40 சதவீதம் குறைந்துள்ளது.

பின்னர் பத்தலகொட அரிசி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தில் இரசாயன மற்றும் சேதன உரங்களை ஒன்றிணைத்து நெல் பயிர்ச்செய்கையில் பயன்படுத்தும் நோக்கில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்தார்.

அதன்படி, 70-30 கலவையின் பயன்பாடு விரும்பத்தக்க முடிவுகளை வழங்கியுள்ளது.

பேராசிரியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், 2022 ஆம் ஆண்டு பெரும் போகத்தில் நெல் பயிர்ச்செய்கையில் இரசாயன மற்றும் சேதன உரங்களை பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
Published from Blogger Prime Android App