இடைக்கால வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றத்தில்!

இந்த ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (30) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிற்பகல் 01.00 மணிக்கு வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.

பிற்பகல் 01 மணி முதல் 02 மணி வரை வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி ஆற்றவுள்ளார்.

அதனையடுத்து நாளை (31) காலை 09.30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படவுள்ளதுடன் அதன் பின்னர் திருத்தப்பட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை முதல் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை நடைபெறும்.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர், குழு அமர்வு மற்றும் மூன்றாம் வாசிப்பின் பின்னர், சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்படும்.

இதேவேளை, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இன்று காலை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு அமைச்சரவை கூடவுள்ளதுடன், நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இன்று பிற்பகல் 02.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவும் பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.
Published from Blogger Prime Android App