சம்பளம் கோரி தொலைக்காட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்றைய தினம் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்த மாதத்திற்கான சம்பளம் தமக்கு நிர்ணயிக்கப்பட்ட நாளிலும் குறித்த நேரத்திலும் வழங்கப்படவில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு இம்மாதத்திற்கான (ஒகஸ்ட்) சம்பளம் இதுவரை வழங்கப்படாத காரணத்தினால், ஊழியர்கள் சங்கத்தின் முகப்பு மண்டபத்தில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாதாந்தம் தமது சம்பளத்தை பெற்றுக்கொள்ள இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட வேண்டியுள்ளதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரூபவாஹினி கூட்டுத்தாபன நிர்வாக உயர் அதிகாரிகள் யாருடைய சலுகைகளையும் குறைக்காமல் சாதாரண ஊழியர்களின் சம்பளத்தை மட்டும் குறைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உரிய சம்பளம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.