சீன கப்பலுக்கு அனுமதி கிடைக்கவில்லை!

சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள, சீன இராணுவத்தின் மூலோபாய ஆதரவுப் படைக்கு சொந்தமான அறிவியல் ஆய்வுக் கப்பலான ' யுவான் வாங் 5' எனும் கப்பல், நேற்று ( 11) அம்பாந்தோட்டையை அடைய திட்டமிட்டிருந்த போதும், அக்கப்பல் நேற்று நள்ளிரவு வரை இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையவில்லை என அறிய முடிகின்றது.

குறித்த ' யுவான் வாங் 5' கப்பல் உள்ளிட்ட எந்தவொரு கப்பலும் நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர அனுமதி கோரப்பட்டிருக்கவில்லை எனவும், தனது அனுமதி இல்லாமல் எந்த கப்பலும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைய முடியாது என துறை முக மா அதிபர் குறிப்பிட்டார்.

அதன்படி, இலங்கையை நோக்கி பயணத்தை ஆரம்பித்த சீனாவின் ' யுவான் வாங் 5' கப்பல், இலங்கையிலிருந்து சுமார் 550 இறுகும் 600 இற்கும் இடைப்பட்ட கடல் மைல் தூரத்தில், அம்பாந்தோட்டையை நோக்கி பயணிக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் அக்கப்பலின் பயணப் பாதை தொடர்பிலான ஏனைய விபரங்களை வெளிப்படுத்திக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நேற்று ஆகஸ்ட் 11 ஆம் திகதியில் இருந்து எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இந்த கப்பலுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 28 ஆம் திகதி சீனா முன் வைத்த கோரிக்கைக்கு அமைய கடந்த ஜூலை 12 ஆம் திகதி இதற்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த 8 ஆம் திகதி, சீன தூதரகத்துக்கு வெளிவிவகார அமைச்சு, கப்பலின் பயணத்தை சற்று தாமதிக்குமாறு கோரி எழுத்து மூல கோரிக்கையினை முன் வைத்திருந்தது.

எனினும் அப்போதும் இலங்கையை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்த யுவான் வாங் 5 கப்பல் வேகத்தைக் குறைத்துள்ள போதும் , இலங்கை நோக்கிய அதன் பயணம் தொடர்கிறது.

எவ்வாறாயினும் குறித்த கப்பல் இலங்கையின் கடல் எல்லையை அண்மித்து, அனுமதி கிடைக்கும் வரையில் நங்கூரமிட்டிருக்கும் திட்டத்துடன் தொடர்ந்து பயணத்தை முன்னெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
Published from Blogger Prime Android App