கடத்தல் பாணியில் இடம்பெறும் கைது நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்குக் கடிதம்!-சட்டத்தரணிகள் சங்கம்

உரிய செயன்முறையைப் பின்பற்றாமல் கடத்தல் பாணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கைது நடவடிக்கைகள் தொடர்பில் தமது சங்க உறுப்பினர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கைது நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் அச்சந்தர்ப்பத்தில் தாம் யாரென்பது பற்றிய அடையாளத்தை வெளிப்படுத்தவும் கைதுசெய்யப்பட்ட நபர் அவரது உறவினருடனோ அல்லது சட்டத்தரணியுடனோ தான் எங்கே இருக்கின்றேன் என்பது குறித்து உரையாடுவதற்கு உடனடியாக வாய்ப்பை வழங்குவதும் அவசியமாகும் என்று பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளது.

உரியவாறான செயன்முறையைப் பின்பற்றாமல் முன்னெடுக்கப்படும் கைது நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் செயலாளர் இசுறு பலபட்டபென்டி ஆகியோர் இணைந்து பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைத்திருக்கும் கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உரிய செயன்முறையைப் பின்பற்றாமல் கடத்தல் பாணியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கைது நடவடிக்கைகள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். தன்னை உரியவாறு அடையாளப்படுத்திக்கொள்ளாமல் சிவில் உடையிலிருந்த பொலிஸ் அதிகாரியொருவரால் நபரொருவர் கைது செய்யப்பட்டமை குறித்து சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களிடமிருந்தும் கொழும்பு நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்திடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அது மாத்திரமன்றி அவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் அடையாளங்காண முடியாத வாகனமொன்றில் கொண்டு செல்லப்பட்டு, தகவல் வெளிப்படுத்தப்படாத இடமொன்றில் சில மணிநேரம் வைக்கப்பட்டிருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இச்சந்தர்ப்பத்தில் வழமையாகப் பின்பற்றப்படவேண்டிய செயன்முறைகள் உரியவாறு பின்பற்றப்படவில்லை.

அன்ரனி வேரங்க புஷ்பிக டி சில்வா மற்றும் மங்கள மத்துமகே ஆகியோர் கைது செய்யப்பட்டபோது மேற்குறிப்பிட்டதையொத்த சம்பவங்கள் பதிவாகியிருந்ததுடன் களனி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவனொருவன் கடத்தப்பட்டு, விடுதலை செய்யப்படுவதற்கு முன்னர் சுமார் மூன்று மணிநேரம் வரையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

அது மாத்திரமன்றி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சந்தேகநபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கு உரியவாறு தகவல்கள் வழங்கப்படவில்லை அல்லது பொலிஸ் காவலிலுள்ள சந்தேகநபர் தொடர்பிலும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் நேரம் குறித்தும் தவறான தகவல்கள் வழங்கப்பட்டன என்றும் எமக்கு அறியத்தரப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் 2018 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க வலிந்து காணாமலாக்கப்படலில் இருந்து அனைத்து நபர்களும் பாதுகாக்கப்படுவதற்கான சட்டம் தொடர்பான சர்வதேச சமவாயத்தின் 15 ஆம் மற்றும் 16 ஆம் பிரிவின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள சில சரத்துக்களை உங்களது அவதானத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

எனவே கைது நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் அச்சந்தர்ப்பத்தில் தாம் யாரென்பது பற்றிய அடையாளத்தை வெளிப்படுத்துவது இன்றியமையாததது என்பதுடன் கைது செய்யப்பட்ட நபர் அவரது உறவினருடனோ அல்லது சட்டத்தரணியுடனோ தான் எங்கே இருக்கின்றேன் என்பது குறித்து உரையாடுவதற்கு உடனடியாக வாய்ப்பை வழங்குவதும் அவசியமாகும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App