நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை !

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும், நிரந்தர உறுதிப் பத்திரங்கள் கிடைக்கப் பெறாத குடும்பங்களுக்கு, நிரந்தர உறுதிப் பத்திரங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனத்திலும் அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த வீட்டு உறுதிப் பத்திரம் வழங்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதால், அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற மீளாய்வு கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உறுதிப் பத்திரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட ஆனால் இதுவரை உறுதிப் பத்திரங்கள வழங்கப்படாத பயனாளிகளின் குடும்பங்களுக்கு வீட்டு உறுதிப் பத்திரங்களை உடனடியாக பெற்றுக்கொடுக்குமாறும், தற்போது தயாரித்துவரும் பத்திரங்களை, வழங்கும் பணிகளை துரிதப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த ஆண்டில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சட்டப் பிரிவுக்கு உறுதிப் பத்திரங்கள் தொடர்பாக 2,033 கோப்புகள் கிடைத்துள்ளன. இவற்றில் 1,996 கோப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,035 உறுதிப் பத்திரங்களுக்கான பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது தவிர தற்போது பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதிப் பத்திரங்களின் எண்ணிக்கை 822 எனவும், 961 உறுதிப் பத்திரங்களின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.Published from Blogger Prime Android App