இலங்கையிடம் டோர்னியர் விமானத்தை இந்தியா கையளித்தது!

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு வழங்கிய டோர்னியர் விமானத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கையளித்தார்.

குறித்த டோர்னியர் விமானம் இன்று (15) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

"பரஸ்பர புரிந்துணர்வு,நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன் டோனியர்228 விமானம் பரிசளிக்கப்படுகின்றமை இந்த இலக்கிற்காக இந்தியா வழங்கும் சமீபத்திய பங்களிப்பாகும்", என உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்நிகழ்வில் தெரிவித்தார்.

இலங்கை விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்ட டோனியர் 228 விமானம் இலங்கையின் பாதுகாப்பை மேம்படுத்த உதவும்.

வங்காள விரிகுடா மற்றும் இந்து சமுத்திர பிராந்தியங்களிலுள்ள, இலங்கை போன்ற அயல் மற்றும் நட்பு நாடுகளின் பலத்தினை வலுவாக்குவதிலும் இந்தியாவின் வல்லமை உறுதுணையாக நிற்கின்றமைக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

இந்தியாவுடனான ஒத்துழைப்பினால் ஏனைய துறைகளில் கிடைக்கப்பெற்ற பலன்களைப் போலவே, இலங்கை விமானப்படைக்கு டோனியர் பரிசளிக்கப்பட்டமையும் முக்கியமானதாக காணப்படுவதுடன், கடல் பாதுகாப்பு குறித்த தேவைகளை இலங்கை நிவர்த்தி செய்வதற்கான ஒரு படியாகவும் கருதப்படுகின்றது என இந்திய உயர்ஸ்தானிகராலய டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App