ஜனாதிபதி ரணில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேலைத்திட்டத்தை முன்வைத்ததாக தெரியவில்லை! - டலஸ்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றது முதல் இதுவரையில் கட்சியில் தோல்வியடைந்த நண்பர்களினதும் மற்றும் தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்களின் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளாரே தவிர ,மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வேலைத்திட்டத்தை முன்வைத்ததாக தெரியவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்தி வைப்புவேளை இரண்டாம் நாள் விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உரையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் எங்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் கிடையாது.

ஜனாதிபதியின்கொள்கை உரை வசனங்களால் அழகுப்படுத்திய உரையாக இருக்கக் கூடாது . இவர் பிரதமராகி இன்னும் மூன்று நாட்களில் மூன்று மாதங்கள் ஆவதுடன் ஜனாதிபதியாக பதவியேற்று ஒருமாதமாகவுள்ளது. இந்தக் காலப்பகுதியில் செயற்பாட்டில் இந்த நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அவர் முன்னெடுத்த நடவடிக்கை என்ன?

இந்தக் காலப்பகுதியில் அவர் அவரின் கட்சியில் தோல்வியடைந்த நண்பர்களின் பிரச்சினைகளையும், தனக்கு உதவிய எம்.பிக்களின் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆனால் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வேலைத்திட்டத்தை முன்வைத்ததாக தெரியவில்லை. வேலைத்திட்டங்கள், யோசனைகளை நாட்டுக்கு முன்னால் வைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அதனை செய்யவில்லை. தங்களுடைய மற்றும் தங்களின் கட்சியின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நெருக்கடியை பயன்படுத்துவதை போன்றே தெரிகின்றது.

இதேவேளை சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் குழுவாக அறிவித்துள்ளோம். நாங்கள் இது தொடர்பான வேலைத்திட்டங்கள் தொடர்பில் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். மக்களின் கௌரவம், நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம் என்றார்.
Published from Blogger Prime Android App