மின் கட்டணத்தை அதிகரிக்காது மின்சார சபையால் முன்செல்ல இயலாது - அமைச்சர் கஞ்சன!

இலங்கை மின்சார சபை சுமார் 612 பில்லியன் கடனை மின்விநியோகஸ்தர்கள், கடன்வழங்குநர்களுக்கு செலுத்த வேண்டிய நிலையில் தான் மின் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மின்கட்டணத்தை அதிகரிக்காமல் மின்சார சபையின் நிதி நெருக்கடியினை முகாமைத்துவம் செய்ய ஏதேனும் திட்டமிருந்தால் எதிர்தரப்பினர் அதனை முன்வைக்கலாம்.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மின்கட்டண திருத்தம் ஊடாக நிவாரணம் வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சபையில் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் 10 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்ற கூட்டத்தொடர் கூடிய போது புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை மின்சார சபையின் வலியுறுத்தளுக்கமைய பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியுடன் மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.மின்கட்டண திருத்தம் தொடர்பில் பாராளுமன்றில் விவாதத்தை தாரானமாக நடத்தலாம்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்கட்டண திருத்தம் ஊடாக நிவாரணம் வழங்க திறைச்சேரியுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நாட்களில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அதற்கான திட்டத்தை செயற்படுத்தும்.

மின்னுற்பத்திக்கான செலவு,கிடைக்கப்பெறும் வருமானத்திற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன.

இலங்கை மின்சார சபை கடந்த ஆண்டு மின்னுற்பத்திக்கு மாத்திரம் 24.6 பில்லியன் நிதியை செலவழித்துள்ளதுடன்,மின் விநியோகத்தின் ஊடாக 21.7 பில்லியன் வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

இவ்வருடத்தில் நிறைவடைந்த 7மாத காலப்பகுதியில் மின்னுற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில் 33 பில்லியன் செலவாகியுள்ளதுடன், 20 பில்லியன் வருமானம் மாத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்டது. உற்பத்திக்கான செலவிற்கும்,கிடைக்கப்பெறும் வருமானத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.

பல்வேறு காரணிகளினால் இலங்கை மின்சார சபை தொடர்ந்து நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளது.தனியார் மின்நிலையங்கள்,அரச வங்கிகள்,மின் விநியோகஸ்தர்கள் ஆகிய தரப்பினருக்கு மாத்திரம் 612 பில்லியன் நிதியை செலுத்த வேண்டியுள்ளது.

மின்சார சபையின் நிதி நெருக்கடியினை முகாமைத்துவம் செய்ய வேண்டுமாயின் மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட வேண்டும். 2013ஆம் ஆண்டுக்கு பிறகு மின்கட்டணம் திருத்தம் செய்யப்படவில்லை.

தற்போதைய மின்கட்டண திருத்தத்தின் ஊடாக மாத்திரம் மின்சார சபையின் நிதி நெருக்கடியினை முகாமைத்துவம் செய்ய முடியாது.

மின்னுற்பத்திக்கான செலவினை குறைக்க பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

மின்கட்டணத்தை அதிகரிக்காமல் இலங்கை மின்சார சபையின் நிதி நெருக்கடியினை முகாமைத்துவம் செய்யும் ஏதேனும் திட்டங்கள் இருக்குமாயின் எதிர்தரப்பினர் அதனை முன்வைக்கலாம்.சகல தரப்பினரது யோசனைகளையும் செயற்படுத்த தயாராகவுள்ளோம் என்றார்.
Published from Blogger Prime Android App