இலங்கையில் 63 இலட்சம் மக்கள் தீவிர உணவு நெருக்கடியில் !

இலங்கையில் சுமார் 63 இலட்சம் மக்கள் சாதாரண தன்மையில் இருந்து தீவிரமான உணவுப் பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமும் உலக உணவு திட்டமும் தெரிவித்துள்ளன.

வாழ்வாதார உதவி போதியளவு வழங்கப்படவில்லையெனின் நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என குறித்த அமைப்புகள் விவசாய அமைச்சரிடம் கையளித்துள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளன.

தொடர்ச்சியாக இரு பயிரிடல் பருவங்கள் தவறவிடபட்டமையினால் உற்பத்தியில் சுமார் 50 வீத வீழ்ச்சியுடன், வெளிநாட்டு நாணய நெருக்கடியினால் உணவு தானியங்களின் இறக்குமதியும் குறைவடைந்துள்ளன. இதன் காரணமே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சாதாரண மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ள குடும்பங்கள் – போசாக்குள்ள உணவிற்கான அணுகும் வசதியைப் பெறுவதற்கு உடனடி உணவு உதவி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் உடனடியாக முன்னெடுக்கப்படல் வேண்டுமென குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உதவி வழங்கப்படாதவிடத்து, குறித்த மக்களின் உணவுப் பாதுகாப்பு நிலைமையானது எதிர்வரும் ஒக்டோபர் முதல் பெப்ரவரி வரையில் மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய உணவுகளின் மோசமான அறுவடை, மற்றும் தொடரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அது உந்தப்படும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு நிலைமைகள் மேலும் வீழ்ச்சியடைவதனை தவிர்ப்பதற்கு மற்றும் உணவு உற்பத்தியின் மீளமைப்புக்கு உதவுவதற்கு, சிறிய அளவிலான விவசாயிகளை இலக்கு வைத்த வாழ்வாதார உதவிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிநிதி விமலேந்திர ஷரன் தெரிவித்துள்ளார்.

மொத்த மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதமானோர் விவசாயத்தில் தங்கியுள்ள நிலையில், விவசாயிகளின் உற்பத்தி இயலுமையை அதிகரித்தல் என்பது விவசாயத் துறையின் நெகிழ்வுத்திறனை மேம்படுத்தும். அத்துடன் வெளிநாட்டு நாணய பற்றாக்குறையின் மத்தியில் இறக்குமதி தேவைகளை குறைத்து, அதிகரிக்கும் பட்டினியை குறைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியுடன் பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், குடும்பங்கள் தெரிவுகள் எதுவுமற்ற நிலையில் உள்ளன. 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் குறைவாக உணவு உட்கொள்கின்றன. மலிவான, ஊட்டச்சத்து குறைந்த உணவுகளை உட்கொள்கின்றனர்.

தாய்மார் மற்றும் ஊட்டச்சத்து குறைவான சிறுவர்களுக்கு பாடசாலை உணவுகள் மற்றும் வலுவூட்டப்பட்ட உணவு போன்ற ஊட்டச்சத்து நிகழ்ச்சிகளை பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கம் குறைக்க நேர்ந்தமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் ஆபத்தில் உள்ள சமுதாயங்களின் ஊட்டச்சத்து நிலைமை மேலும் மோசமடைந்து செல்வதனை தவிர்ப்பதற்கு அவர்களுக்கான உடனடி உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவியை வழங்குவதே உலக உணவு திட்டத்தின் முதன் முன்னுரிமையாகும் என அதன் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் அப்துர் ரஹீம் சித்திக்கீ தெரிவித்துள்ளார்.
Published from Blogger Prime Android App