900 மில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்த சுற்றுலாத்துறை வருமானம் !

கடந்த மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையானது, உலகளாவிய பொழுது போக்கு பயணத்தின் மீள் எழுச்சி, இலங்கை அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் கவனம் செலுத்தி அதிக சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பதன் மூலம் ஓரளவு மீட்சியைக் காட்டுகிறது.

இலங்கை மத்திய வங்கியால் தொகுக்கப்பட்ட வருவாய்த் தரவுகளின்படி, ஒகஸ்ட் மாதத்தில் சுற்றுலா மூலம் இலங்கை 67.9 மில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டியுள்ளது.

எவ்வாறாயினும், ஜூலை மாதத்தில் 85.1 மில்லியன் ரூபா சுற்றுலா வருமானமாக ஈட்டப்பட்டது.

ஒப்பீட்டளவில் கடந்த மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்தமையினால் , முந்தைய மாதத்தை விட ஒகஸ்ட் வருமானம் சற்று குறைவடைந்துள்ளது.

ஜூலை மாதத்தில் 47,293 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், ஒகஸ்ட் மாதத்தில் அந்த எண்ணிக்கை 37760 பேர் வரை சுமார் 10 ஆயிரத்தினால் குறைந்துள்ளது. இந்த வருடம் மார்ச் மாதம் முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான பெறுமதியில் 80 வீதத்தை இலங்கையின் நாணயம் இழந்ததையடுத்து, இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு ஒப்பீட்டளவில் மலிவான சுற்றுலாத் தளமாக மாறியது.

ஜூலையில் ஏற்பட்ட பாரிய சமூக அமைதியின்மை கணிசமாகத் தணிந்துள்ள நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் பல ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தளர்த்தியுள்ளன.

ஒகஸ்ட மாத வருவாயுடன், சுற்றுலா பயணிகளின் வருகையால் கடந்த எட்டு மாதங்களில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் 892.8 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. கொவிட்-19 தொற்றுநோய் அதன் இரண்டாவது ஆண்டாக சுற்றுலா தொழில்துறையைத் தாக்கியதால் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் சுற்றுலா வருவாய் 63.5 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.

இந்த ஆண்டு சுற்றுலா வர்த்தகத்தில் இருந்து குறைந்தது ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்க்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகளை இலங்கைக்கு பெருமளவில் ஈடுசெய்ய, புலம்பெயர் பணியாளர்களின் பணப்பரிமாற்றங்களுடன் இத்தகைய சுற்றுலா பயணிகளின் வரவுகளும் உதவுகின்றன.

செப்டெம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுடன், மொத்தமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை 5 இலட்சத்தை தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
Published from Blogger Prime Android App