இறுக்கமான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் : இரா.சம்பந்தன்

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானமொன்று ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வழங்கியே தீர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பதில் ஆணையாளர் ஆற்றிய உரையை வரவேற்கின்றோம். அதேவேளை, இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அறிக்கையையும் நாம் வரவேற்கின்றோம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பரிந்துரைகளை இலங்கை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு தொடர்ந்து உதாசீனம் செய்து வருகின்றது எனக் குறிப்பிட்ட அவர்,

அரசியல் தீர்வு சம்பந்தமான பரிந்துரையையும் கூட இலங்கை நடைமுறைப்படுத்தவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னமும் அமுலில்தான் இருக்கின்றது. அதன் கீழ் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஐ.நா.வுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் இலங்கை அரசு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

அந்த வாக்குறுதிகளைக் கிடப்பில் போட்டு விட்டு சர்வதேச சமூகத்தை இதுவரை காலமும் இலங்கை அரசு ஏமாற்றி வந்தது. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் இம்முறை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும். 

இதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வழங்கியே தீர வேண்டும் என்றார்.
Published from Blogger Prime Android App