தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்காக திறப்பு – நுழைவுச்சீட்டு கட்டணம் குறித்த விபரம்!

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை இன்று (வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாவனைக்காக தாமரை கோபுரம் இன்று திறக்கப்படவுள்ள நிலையில், 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் கட்டணத்தில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு உள்ளே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களுக்கு நுழைவுச்சீட்டுக் கட்டணம் 20 அமெரிக்க டொலர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 300 மீற்றர் உயரமான கோபுரம், வர்த்தகப் பலன்களைப் பெறும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இவ்வாறு திறக்கப்படவுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி நிறைவடைந்துள்ளதுடன், சீன நிறுவனம் வழங்கிய கடனை செலுத்தும் பணியை 2024 ஆம் ஆண்டு நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தாமரை கோபுர முதலீட்டில் இதுவரை உள்நாட்டு முதலீட்டாளர்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இணைந்துள்ளதுடன் , 22 முதலீட்டாளர்கள் ஒப்பந்தத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 15 வெவ்வேறு விழாக்களுக்கான முன்பதிவுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published from Blogger Prime Android App