நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்வதற்கு வழிகூறும் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் !

அனைவரும் இணைந்து செயற்பட்டால் உருவாக்கப்படவுள்ள தேசிய சபை மூலம் பொருளாதார பிரச்சினை உள்ளிட்ட இதர பிரச்சினைகளோடு இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என அமைச்சர் நஸீர் அஹமட், தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20) பிரதமரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய சபை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இத்தகைய நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய சபை ஒன்றை அமைப்பதற்கான பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பல சபைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் இதுபோன்ற ஒரு சபை இதுவரை அமைக்கப்படவில்லை. இந்த சபை மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொள்ள முடியும். ஒரு சட்ட வாக்கமாக இதனை செயற்படுத்தி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இதனை பயன்படுத்த முடியும்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும் போதும் பிரதான பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படாமலேயே உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் உருவாக்கப்படவுள்ள தேசிய சபை மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அதனால் அனைவரும் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

எனவே, காலத்தை வீணடிக்காமல் உருவாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என்றார்.
Published from Blogger Prime Android App