இலங்கைக்கும் சவூதி அரேபியா இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக அண்மையில் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்திருந்த போது இந்த அழைப்பை சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், விடுத்துள்ளார்.
முழு பிராந்தியத்தையும் உள்ளடக்கும் வகையில் போதுமான எண்ணெய் சேமிப்பு வசதிகளை இலங்கை வழங்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவுடன் வலுவான நீண்ட கால உறவை ஏற்படுத்துவதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான நவீன எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு வசதிகளை வழங்குவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில், எரிவாயு எண்ணெய், பெற்றோல், ஜெட் ஏ-1 எரிபொருள், மசகு எண்ணெய் போன்றவற்றை இலங்கைக்கு பெற்றுக் கொள்ளக் கூடிய நீண்டகால உடன்படிக்கைகள் மற்றும் நீண்டகால பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
ஆசிய பிராந்தியத்தில் முன்னணி பொருளாதார சக்திகளில் ஒன்றான சவூதி அரேபியா எரிசக்தி துறையில் முன்னணியில் முக்கிய பங்காற்றி வருவதாகவும், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் “விஷன் 2030” இலங்கை உட்பட ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.