அரசாங்க ஊழியர்கள் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க முடியாது

அரசாங்க ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் போது பின்பற்ற வேண்டிய முறைமை தொடர்பில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சு விசேட சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றுநிருபங்களை பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவோர் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தக்கூடிய குற்றவாளியாக கருதப்படுவரென்றும் அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுநிருபம் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மயாதுன்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதுடன் தாபனக் கோவை இரண்டாவது பிரிவின் XLVII அத்தியாயத்தின் ஆறாவது மற்றும் ஏழாவது சரத்துக்களில் காணப்படும் முறைமையை பின்பற்ற தவறும் அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களே ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தக்கூடிய குற்றவாளியாகக் கருதப்படுவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசியல் உரிமையை அனுபவிப்பதற்கு உரித்தற்ற அதிகாரிகளினால் மேற்கொள்ளக்கூடாத ஏற்பாடுகள் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் போது அதற்காக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் அந்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published from Blogger Prime Android App