குருந்தூர்மலை ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட ரவிகரன் மற்றும் மயூரன் நீதிமன்றில் !

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்று (21) குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்துகொண்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் உள்ளிட்ட பலருக்கு எதிராக தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொள்வதற்காக து.ரவிகரன் மற்றும், இ.மயூரன் ஆகியோரை முல்லைத்தீவு பொலிஸார், நேற்று புதன்கிழமை மாலை பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் பொலிஸ் நிலையம் சென்ற இருவரையும் நேற்றிரவு பொலிஸார் கைது செய்திருந்தனர் இதனை தொடர்ந்து மேலும் பலரை கைது செய்ய முல்லைத்தீவு பொலிஸரர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் தற்போது முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் முல்லைத்தீவு நீதிமன்றம் அழைத்து சென்றுள்ளனர்.

இதேவேளை பொலிசாரின் நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவில் மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்றுக்கு தயாராகி வருகின்றனர்.
Published from Blogger Prime Android App