இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட ஒருவருக்கும் இராஜாங்க அமைச்சுக்கான வரப்பிரசாதங்கள் வழங்கப்பட போவதில்லை

இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட ஒருவருக்கும் இராஜாங்க அமைச்சுக்கான வரப்பிரசாதங்கள் வழங்கப்பட போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தொலைக்காட்சியில் இரவு நேர செய்தியை பார்க்கும் மக்கள் இவ்விடயத்தை வேறுவிதத்தில் புரிந்துக்கொள்ள கூடும்.

அமைச்சுக்கள் அதிகரிக்கப்பட்டுவிட்டதாக மக்கள் குழப்பமடைவர்.

எனினும் ஒருவிடயத்தை இந்த இடத்தில் தெளிவுப்படுத்த விரும்புகின்றேன்.

இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட ஒருவருக்கும் இராஜாங்க அமைச்சுக்கான வரப்பிரசாதங்கள் வழங்கப்பட போவதில்லை. அவர்கள் அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளும் சம்பளத்துக்கு அமைவாகவே பணியாற்ற வேண்டும்.

இதன் அடிப்படை விடயத்தை எடுத்துக்கொண்டால் உதாரணமாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அமைச்சின் கீழ் 40 திணைக்களங்கள் உள்ளன. இவை அனைத்தையும் அமைச்சரவை அமைச்சினால் கண்காணிக்க முடியாது.

அதேபோன்று அமைச்சர் ரமேஸ் பத்திரணவின் அமைச்சின் கீழ் 72 திணைக்களங்கள் உள்ளன.

இந்த திணைக்களங்களின் அனைத்துப் பணிகளும் ஸ்தம்பிதம் அடைந்து 18 அமைச்சுக்;கள் மட்டுமே இருந்தன.

எனவே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியன் பின்னரே அரசாங்கமானது இராஜாங்க அமைச்சர்களை நியமித்தது.

இந்தத் திணைக்களங்களின் பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இந்த நியமனங்களின் நோக்கமாகும்.

எனவே இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித வரப்பிரசாதங்களும் கிடைக்கப்போவதில்லை என்பதை தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 4 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதை இந்த இடத்தில் நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன். இதனை மறந்துவிடக்கூடாது.
Published from Blogger Prime Android App