நிலவுகின்ற பொருளாதாரத்தையும் அரசியலையும் வைத்துக்கொண்டு நாட்டுக்கு முன்னேற்றப்பயணம் கிடையாது : அநுர திசாநாயக்க

அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டுமென்ற தலைப்பு இன்று புதியதொரு சுற்றில் உரையாடலுக்கு வந்துள்ளது. இந்த உரையாடல் பிரபல்யமடைந்து வருகின்றது. எண்ணெய் விலை, கேஸ் விலை அதிகரிக்கையில் இந்த நிறுவனங்கள்தான் எம்மை நாசமாக்கி வருகின்றதென ஒருவர் உணரலாம். அதனால் இந்த நிறுவனங்கள் விற்கப்படவேண்டுமென்ற கருத்து ஓரளவுக்கு உருவாகி இருக்கின்றது. நாங்கள் முதலில் பார்த்தால் இந்த அரசாங்கத்திற்கு கிடைத்த மக்கள் ஆணை யாது? அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்கையில் மகிந்த கூறயிருந்தார் "மைத்திரி - ரனில் கூட்டு அரசாங்கம் விற்கின்றவற்றை கவனத்துடன் வாங்குங்கள். நாங்கள் வந்ததும் அவற்றை மீளப்பெறுவோம். அம்பாந்தோட்டை துறைமுகத்தை மீளக்கையேற்போம்." என்றார்.

 கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகி முதலில் இந்தியாவுக்கே விஜயம் செய்தார். "அம்பாந்தோட்டை விற்பனைசெய்தமை பற்றிய உடன்படிக்கையை மீளாய்வுக்கு இலக்காக்குவதாக" அங்கு கூறினார். ராஜபக்ஷ அரசாங்கத்தின் மக்கள் ஆணையின் உள்ளடக்கமாக அமைந்தது அரச ஆதனங்களை பாதுகாப்பதேயாகும். இந்த மக்கள் ஆணைக்கு எதிராக இருந்தவர் ரனில் விக்கிரமசிங்க. ரனிலின் மக்கள் ஆணைக்கு தேசியப் பட்டியலில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி மாத்திரமே கிடைத்தது. அவர் கொழும்பு மாவட்டத் தலைவராக முன்வந்தாலும் அவர் தெரிவுசெய்யப்படவில்லை. இன்றளவில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரனிலின் நிகழ்ச்சிநிரல் ராஜபக்ஷ பாசறையின் நிகழ்ச்சிநிரலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த விற்பனை செய்கின்ற கதை ஒரு புறத்தில் 2019 இலும் 2020 இலும் கிடைத்த மக்கள் ஆணைக்கு முரணானது.

இந்த விற்பனை செய்கின்ற கதை நீண்டகாலமாக பல்வேறு பக்கங்களிலிருந்து வருகின்றது. பல நிறுவனங்கள் விற்கப்பட்டன. விஜேபால மென்டிஸ் அமைச்சராக இருந்த காலத்தில் 1987 அளவில் எமது நெசவுத் தொழிற்சாலைகள் விற்கப்பட்டன. அவரில் இருந்துதான் அரச ஆதனங்களின் விற்பனை தொடங்கியது. நாட்டுக்குள்ளே அவசியமாக புடவைகளில் பெரும்பங்கினை நாங்கள் பிரதிநிதித்துவம் செய்துகொண்டிருந்தோம். துல்ஹிரிய, மத்தேகொட, வேயங்கொட புடவைக் குடியேற்றங்கள் நிலவின. இவை 35 வருடகாலத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டமையால் தொழில்நுட்பம் தாழ்ந்த மட்டத்திலும் குறைந்த தரமும் காணப்பட்டது. இந்த விற்பனை காரணமாக பாவனைக்கு அவசியமான துணிகள் பெருமளவில் இறக்குமதி செய்யப்படவேண்டியநிலை ஏற்பட்டது. மத்தேகொட மூடப்பட்டது, பூகொட பாழடைந்தது. வேயங்கொட பாழடைந்தது. அடுத்த விற்பனை தோட்டங்களிலேயே இடம்பெற்றது. அரச தோட்டங்கள் கைவிடப்பட்டன. இறுதியில் அதன் பெறுபேறாக அவற்றில் சேவையாற்றுகின்ற ஊழியருக்கு 1000 ரூபா சம்பளம் செலுத்த முடியாது எனக் கூறினார்கள். இந்த அரசியல்மயமாக்கத்தினால் அடைந்த முன்னேற்றம் என்ன? ஊழியர்கள் ரூபா 1000 சம்பளத்தைக் கோரியதால் எஜமான்கள் வழக்குப் போட்டார்கள். அந்த தனியார்மயப்படுத்தலினால் கிடைத்த நன்மை என்ன? எமது கடதாசி ஆலை வளர்ந்து வந்துகொண்டிருந்தது. வாழைச்சேனை யுத்தம் காரணமாக சீரழிந்தாலும் எம்பிலிப்பிட்டியவில் கடதாசி ஆலை பேணிவரப்பட்டது. அதனை விற்றுத் தீர்த்தார்கள். இன்று நாட்டில் அப்பியாசப் புத்தகங்கள் இல்லையெனவும் வினாத்தாள், புதினத்தாள் அச்சிடுவது சிரமமானதெனவும் பாரிய அவலக்குரல் எழுந்துவருகின்றது. ஒருதடவை அதனை மீண்டும் கையேற்றாலும் மீளவும் விற்பனை செய்தார்கள். ஒருசில காணிகளையும் இயந்திரசாதனங்களையும் வங்கியில் அடகுவைத்துவிட்டு முதலீட்டாளர்கள் தப்பியோடிவிட்டார்கள். இந்த விற்பனையிலிருந்து கிடைத்த பெறுபேறு என்ன? கந்தளாய் மற்றும் ஹிங்குரான சீனித் தொழிற்சாலைகள் விற்கப்பட்டன. கந்தளாயில் 23,000 ஏக்கர்களும் ஏறக்குறைய 3,000 ஏக்கர் நாற்றுமேடையும் இருந்தது. அதற்கு ஒத்துவரக்கூடிய கைத்தொழில் தொகுதியொன்றும் இருந்தது. விற்பனையின் பெறுபேறாக பெருந்தொகையான நிலப்பரப்பு பாழடைந்துள்ளது. ஹிங்குரான சீனி ஆலை அண்மையில் தொடங்கப்பட்டது. வெலிசர பால்மாத் தொழிற்சாலை விற்கப்பட்டது. ஒட்டுப்பலகைக் கூட்டுத்தாபனமொன்று இருந்தது. இன்று அதனையும் நாங்கள் இழந்துவிட்டோம். தங்கொட்டுவ போசிலேன், பிலியந்தலை போசிலேன் தொழிற்சாலைகள் பாழடைந்துவிட்டன.

தனியார்மயமாக்கலுக்கான பாதையொன்று இருப்பவர்கள் முதலில் செய்யவேண்டியது தனியார்மயப்படுத்திய நிறுவனங்களின் ஐந்தொகையொன்றை சமர்ப்பிக்கவேண்டும். அவர்கள் டெலிகொம்மை தனியார்மயப்படுத்துவது சாதகமானதென அடிக்கடி கூறுகிறார்கள். டெலிகொம் தன்யார்மயமாக்கலும் டெலிகொம் தொழில்நுட்பமும் ஒன்றாகவே முன்னேற்றமடைந்தது. மொபைல் தொழில்நுட்பம் தனியார்மயமாக்கலுடன் உலகில் ஒன்றாக பின்னிப்பிணைந்துள்ளது. 1990 இல் ஏறக்குறைய இரண்டுமாதங்கள் அப்ளிகேஷனை பூர்த்திசெய்து வரிசையில் காத்திருக்கவேண்டும்தான். அந்தக் காலகட்டத்தில் வயர்கள் மூலமாக தொடர்பாடலைப் பெற்றுக்கொள்கின்ற தொழில்நுட்பமே இருந்தது. வயர்லஸ் தொழில்நுட்பம் வரும்போது நாங்கள் அந்த நிறுவனங்ளை விற்றுவிட்டோம். அது தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பெறுபேறேயொழிய தனியார்மயமாக்கலின் பெறுபேறு அல்ல. அரச நிறுவனங்கள் மாத்திரம் இருந்திருப்பின் நல்லது என நாங்கள் கூறப்போவதில்லை. எனினும் இந்த தனியார்மயமாக்கல்தான் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்கின்ற பாதையின் பிரகாசமிக்க பாதையென எடுத்துக்காட்ட முனைகிறார்கள். அது பொய்யானதாகும்.

மக்களை வதைக்கின்றபோது இவற்றைப் விற்றுப்போட்டாலும் பரவாயில்லை எனும் கருத்தொன்று மக்களிடம் தோன்றுகின்றது. அதைப்போலவே அரச நிறுவனங்கள் வினைத்திறனற்றவை அவற்றை விற்றுத்தீர்த்திட வேண்டுமென்ற கருத்தொன்றும் அவர்களிடம் தோன்றுகின்றது. வினைத்திறனின்மையை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக விற்கத்தான் வேண்டுமா? காணி வழக்கொன்றைத் தீர்க்க 20 வருடங்களுக்கு மேலாகின்றது. அந்த வாதத்திற்கிணங்க நீதித்துறை வினைத்திறனற்றது. பொலீஸ் வினைத்திறனற்றது. அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களும் வினைத்திறனற்றவை. வினைத்திறனற்ற எல்லா நிறுவனங்களையும் நாங்கள் விற்றுத்தீர்த்திட வேண்டுமா? அந்த வினைத்திறன் நிலவுவது அரச நிறுவனங்களிலா, தனியார் துறையிலா என்பதன் பேரில் அல்ல. இங்கு இருப்பது சமூக பொருளாதார சிக்கலொன்று. நாங்கள் அதனைத்தான் தீர்க்கவேண்டும்.

அரச நிறுவனங்கள் பாரிய நட்டத்தை அடைகின்றன. அவை திறைசேரிக்கு பாரிய சுமையென மற்றுமொரு முன்மொழிவு வருகின்றது. அதனால் இந்த நிறுவனங்கள் விற்பனை செய்யப்படவேண்டுமென்ற கருத்தியல் கட்டிவளர்க்கப்படுகின்றது. இன்றளவில் மத்திய வங்கியும் நட்டம். அமைச்சரவையும் நட்டம். நட்டமடைகின்ற நிறுவனங்கள் விற்கப்பட வேண்டுமாயின் இந்த நிறுவனங்களும் விற்கப்பட வேண்டும். ஆனால் இங்கு விற்க முற்படுவது நட்டமடைகின்ற நிறுவனங்களை மாத்திரமா? இன்றளவில் இலாபம் ஈட்டிக்கொண்டிருக்கின்ற டெலிகொம் நிறுவனத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமாக 51% பங்குகள் இருக்கின்றது. இப்போது இந்த 51% ஐ விற்க முன்மொழியப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை விற்க முன்மொழியப்படுகின்றது. 2003 தொடக்கம் 2021 வரை ஒவ்வொரு வருடத்திலும் அரசாங்கத்திற்கு வரி செலுத்தப்பட்டுள்ளது. அதைப்போலவே பங்குதாரர்களுக்கு பங்கிலாபம் செலுத்தப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் அது 1700 மில்லியன் வரியை அரசாங்கத்திற்கு செலுத்தியுள்ளது. பங்கிலாபமாக 1500 செலுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க வரி மற்றும் பங்கிலாபமாக 3200 மில்லியன் திறைசேரிக்கு கிடைத்துள்ளது. அப்படியானால் இலாபம் பெறுகின்ற இந்த நிறுவனங்கள் ஏன் விற்பனை செய்யப்படுகின்றன? 

எயார் லங்கா நிறுவனத்திடம் எயார் லயின், கிரவுன்ட் ஹென்டிலிங், கேட்டரிங் சேர்விஸ் என மூன்று நிறுவனங்கள் இருக்கின்றன. கேட்டரிங் சேர்விஸ் விற்கப்பட வேண்டுமென அண்மையில் நிமல் சிறிபால கூறினார். 2011 தொடக்கம் 2021 வரை 11 வருடங்களுக்கான கணக்கறிக்கைகளின்படி 2020 மற்றும் 2021 நீங்கலாக ஏனைய ஒவ்வொரு வருடத்திலும் கேட்டரிங் இலாபம் அடைந்துள்ளது. (2020 - 2021 வருடங்களில் கொவிட் நிலைமை தாக்கமேற்படுத்தி உள்ளது.) அது 2021 - 2022 ஆண்டில் 2796 மில்லியன் இலாபம் அடைந்துள்ளது. 2019 - 2020 ஆம் ஆண்டில் 4760 மில்லியன் இலாபம் பெற்றுள்ளது. நட்டமடைகின்ற நிறுவனங்கள் விற்கப்பட வேண்டுமாயின் இலாபம் பெறுகின்ற கேட்டரிங் ஏன் விற்கப்பட வேண்டும்? கிரவுன்ட் ஹென்டிலிங் 2021 ஆம் ஆண்டில் 5009 மில்லியன் இலாபம். அப்படியானால் இலாபம் பெறுகின்ற கிரவுன்ட் ஹென்டிலிங் ஏன் விற்கப்படவேண்டும்? எயார் லயின் நட்டம். இந்த நட்டம் எப்படி இடம்பெறுகின்து? சர்வதேச பிணைமுறிகள் என்றவகையில் 175 மில்லியன் டொலர் கடன் பெறப்பட்டுள்ளது. இலங்கை வங்கியிடமிருந்து 80 மில்லியன் டொலர் கடன் பெறப்பட்டுள்ளது. மக்கள் வங்கியிடமிருந்து 466 மில்லியன் டொலர் கடன் பெறப்பட்டுள்ளது. பெற்றோலியம், எயார் போட் மற்றும் வானூர்திகள் நிலுவை வரி இவையனைத்திற்காகவும் 401 பில்லியன் ரூபா கடன் செலுத்தவேண்டி உள்ளது. இவ்விதமாக கடன்செலுத்த வேண்டியுள்ள எயார் லயினை எவரும் விலைக்கு வாங்க மாட்டார்கள். அரசாங்கம் முயற்சி செய்வது இந்த கடனை திறைசேரி பொறுப்பேற்று கடனை பூச்சியமாக்கி விற்பதையாகும்.

ஆமெனில் இந்த விற்பனை எதற்காக? ஒன்று அவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்ற பொருளாதார உபாயமார்க்கத்தை அமுலாக்குவதற்காகும். மற்றைய காரணம் டொலர் தட்டுப்பாடு ஆகும். 1980 இல் இருந்து நாட்டுக்கு அவசியமான டொலரை ஈட்டுவதில் தோல்வி கண்டுள்ளோம். எமக்கு இறக்குமதி மற்றும் கடன் செலுத்துவதற்காக 14,800 மில்லியன் டொலர் அவசியமாகின்றது. இதற்கு முன்னர் கடன்பெறுவதன் மூலமாகவும் விற்பதன் ஊடாக பணம் பெறுவதன் மூலமாகவுமே நாங்கள் இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்தோம். 2020 அளவில் கடன்பெற இயலாமல் போனமையால் நெருக்கடி ஒரு பிரச்சினையாக உருவாகி வந்தது. இத்தருணத்தில் தோன்றியுள்ள வெளிநாட்டு ஒதுக்கங்களின் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக விற்கத் தயாராகிறார்கள். மூன்றாவது காரணம்தான் விற்பதற்காக அவர்களிடமுள்ள விருப்பம். விற்பனை செய்வது ஒரு பிஸ்னஸ். ஹிங்குரான சீனி ஆலையை விற்கின்றவேளையில் 7000 ஏக்கர் கரும்புச் செய்கை இருந்தது. 300 ஏக்கர் நாற்று மேடை இருந்தது. தொழிற்சாலைகள் இருந்தன. களஞ்சியத்தில் சீனி இருந்தது. ஆலைக்குச் சொந்தமான 70 மில்லியன் நிலையான வைப்பு வங்கியில் இருந்தது. இந்த நேரத்தில் களஞ்சியத்தில் இருந்த சீனியின் பெறுமதியைவிடக் குறைவான பெறுமதிக்கு ஹிங்குரான சீனி ஆலை விற்கப்பட்டது. இந்த ஒவ்வொரு விற்பனைக்காகவும் அவர்களுக்கு கிடைக்கின்ற கொமிஸ் தொகையும் கிடைத்தது. என்னதான் ஏதுக்களை முன்வைத்தாலும் இவை வளங்களை விற்பதற்கான மறைமுகமான காரணங்களாக தாக்கமேற்படுத்தி உள்ளன.

அப்படியானல் நாங்கள் இப்போது என்ன செய்யவேண்டும்? தோடம்பழக் குவியலைக் கட்டிப்பிடித்தது போல அரசாங்கம் இவையனைத்தையும் கட்டிப்பிடித்துக்கொள்ள வேண்டுமா? அரசாங்கம் சமூகம் பற்றிய பொறுப்பினை எற்றுக்கொள்ள வேண்டும். அவை பண்டங்களையும் சேவைகளையும் நியாயமான விலைக்கும் தரமிக்கதாகவும் தாராளமாகவும் வழங்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கே உண்டு. தனியார் கம்பெனியொன்று சமூகப் பொறுப்பினை வகிப்பது கிடையாது. மக்களுக்கு ஏற்படுகின்ற அழுத்தங்களை சந்தையில் ஒருசில துறைகளை ஒழுங்குறுத்துதல் மூலமாக எம்மால் கட்டுப்படுத்த முடியும். பாவனையாளர் அதிகாரசபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு என்பவை ஒழுங்குறுத்தல் நிறுவனங்களாகும். மேலும் ஒருசில துறைகளுக்காக கூட்டுறவு வலையமைப்பு மூலமாக இயங்க முடியும். இந்தியாவின் குஜராத்தில் உள்ள "அமூல்" பால் தொழிற்சாலை முழுமையாக கூட்டுறவு முறையின் அடிப்படையிலேயே இயங்குகின்றது. "அங்கர்" தயாரிக்கின்ற நியுசிலாந்தின் "பொன்டேறா" தொழிற்சாலை கூட்டுறவு முறையின்படி கட்டியெழுப்பப்பட்ட நிறுவனமொன்றாகும். கூட்டுறவு எண்ணக்கரு சந்தையை நெறிப்படுத்துவதற்கான மிகச்சிறந்த கட்டுப்பாட்டு முறையாகும். உலகில் பல இடங்களில் கூட்டுறவு முறை அமுலில் இருக்கின்றது. அதனை நாங்கள் எற்றுக்கொள்ள வேண்டும்.

பிரதான அரிசி வழங்கலாளர்கள் சந்தைக்கு அவசியமான அரிசியில் 23% ஐ மாத்திரமே வழங்குகிறார்கள். இலங்கைக்கு நாளொன்றின் நுகர்வுக்காக அவசியமான அரிசி 65 இலட்சம் கிலோ கிறாம் ஆகும். அரலிய அரிசி நாளொன்றுக்கு 04 இலட்சம் கிலோ வழங்கப்படுகின்றது. 77% சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசியாலை உரிமையாளர்களின் கைகளிலேயே இருக்கின்றது. பிரதான வழங்கலாளர்கள் குறைந்த அளவினை வழங்கினாலும் அவர்களுக்கு அரிசி மற்றும் நெல் சந்தையை நெறிப்படுத்த முடிகின்றது. உரிய அளவினை இடையறாது வழங்கும் இயலுமை நிலவுகின்றமை, வர்த்தகப் பெயர் (பிரேன்ட் நேம்) நிலவுகின்றமை மற்றும் தரம் நிலவுதல் என்பவையே அதற்கான காரணம். அதனால் அரிசி மற்றும் நெல் சந்தையில் அதிகாரத்தை உரித்தாக்கிக் கொள்வதற்கான இயலுமை கிடைத்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழல் முயற்சியாளருக்கு மூலதனம், தொழில்நுட்பத்தை வழங்கி, சங்கங்களின் வலையமைப்பு மூலமாக ஒழுங்கமைத்து, ஒரு பிரேன்டில், ஒரே தரத்தில், இடையறாது சந்தைக்கு அரிசியை அனுப்பிவைக்க ஆவன செய்வதையே நாங்கள் செய்யவேண்டியுள்ளது. அப்போது இந்த அதிகாரத்தை தகர்க்கலாம்.

மூன்றாவதாக சுதந்திர சந்தையை உருவாக்குவதன் மூலமாகவும் நான்காவதாக அரசாங்கத்தின் செயற்பாடு மூலமாக இடையீடுசெய்யவும் முடியும். நாங்கள் தேசிய பொருளாதார உபாயமார்க்கத்திற்கு நேரொத்ததாக அரசாங்கத்தை நெறிப்படுத்துவோம். நாட்டின் பொருளாதார உயிர்நிலைகள் அரசாங்கத்திற்கு உரியதாக அமைதல் வேண்டும். அரசாங்கம் அரசியல் தலையீட்டினை மேற்கொள்வதை நிறுத்தவேண்டும். நாங்கள் அதனைச் செய்வோம். செய்தும் இருக்கிறோம். நான் கமத்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் லக்பொஹொர தலைவராக திறமையும் அனுபவமும் கொண்ட வர்த்தக அறிவும் படைத்த அரசியல் கலப்பற்ற ஒருவரையே நியமித்தேன். கொமர்ஷல் பசளையில், மில்கோ நிறுவனத்தில், கமத்தொழில் காப்புறுதிச் சபையில், நீர் வளச் சபையில், என்.எல்.டீ. நிறுவனத்தில் அரசியல் கலப்பற்ற திறமையானவர்களையே தலைவர்களாக நியமித்தேன். மில்கோ நிறுவனம் இலாபம் ஈட்டியது மாத்திரமன்றி பால் வழங்கிய பண்ணையாளர்களுக்கு முதல்த்தடவையாக பங்கிலாபம்கூட செலுத்தப்பட்டது. ஊழியர் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. இந்த அனைத்து நிறுவனங்களும் இருந்ததைவிட வினைத்திறன்மிக்கவையாக பேணிவரப்பட்டன

இந்த நிறுவனங்களில் அரசியல் தலையீடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அடுத்ததாக இவற்றில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகளை நீக்கவேண்டும். விடயத்துறை பற்றிய புரிந்துணர்வுகொண்ட தமது அறிவினைப் பயன்படுத்தி புதிய ஒன்றை செய்யக்கூடியவர்களை சேவையில் ஈடுபடுத்தினால் ஊழியரும் அதற்கு நேரொத்தவகையில் சேவையாற்றுவார்கள். அப்போது ஊழல் மோசடிகளை நிறுத்துவதற்கான இயலுமை கிடைக்கும். இப்போது இந்த நிறுவனங்கள் ஊழியர்களால் நிரப்பப்பட்டுள்ளன. மின்சார சபையில் 25,624 ஊழியர்கள் இருக்கிறார்கள். பெற்றோலியத்தில் 2300 ஊழியர்கள். IOC இல் 164 பேர். ஒவ்வொரு நிறுவனத்தினதும் அமைச்சர்கள் தமது நிறுவனங்களக்கு தமது எண்ணப்படி அரசியல் நியமனங்களை வழங்கியதன் மூலமாக இந்த பணியாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு கல்விசார்ந்த பணியாட்டொகுதி குறைவடைந்துள்ளது. அரச சேவையில் கீழ்மட்ட ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச சேவை அந்த இடத்தில்தான் சீரழிகின்றது. ஆசியாவின் மிகச்சிறந்த அரசசேவை எம்மிடம் இருந்தது. அரசியல் தலையீடு காரணமாகவே அது முழுமையாக நாசமாக்கப்பட்டது.

  
மின்சார சபையை விற்பதற்கான உரையாடலொன்று தோன்றியுள்ளது. இங்கு மூன்று பிரதான நிறுவனங்கள் இருக்கின்றன. ஒன்று பிறப்பாக்கம். இரண்டாவது கொண்டுசெல்லல். மூன்றாவது விநியோகம். பிறப்பாக்கம் மூவகையானது. நீர் மின்நிலையங்கள், நுரைச்சோலை போன்ற மின்சார சபைக்குச் சொந்தமான மின்நிலையங்கள் இருக்கின்றன. யுகதனவி மின்நிலையத்திடம் திறைசேரிக்கு சொந்தமான பங்குகள் இருக்கின்றன. மின்சார சபையினதும் எல்.ரீ.எல். இனதும் பங்குகள் இருக்கின்றன. அதேவேளையில் தனியார் மின்நிலையங்களும் இருக்கின்றன. அவர்களின் பிறப்பாக்க அலகிற்காக நிலையான கட்டணமொன்றை நாங்கள் செலுத்துகிறோம். அதற்கு மேலதிகமாக பாவித்தால் அதிகமாக செலுத்துகிறோம்.

மகாவலி நீர்மின் நிலையங்களில் அலகொன்றை உற்பத்தி செய்வதற்காக 2.54 ரூபா செலவாகின்றது. லக்ஷபான மின்நிலையத்தில் செலவு 1.58 ரூபாவாகும். சமனல மின்நிலையத்தில் 3.13 ரூபாவாகும். நீர் மின்சார அலகொன்றை உற்பத்தி செய்வதற்கான சராசரி செலவு ரூ. 2.35 ஆகும். பிறப்பாக்கம் நட்டமடைவதில்லை. இந்த பிறப்பாக்கத்தை விற்பனை செய்யவும் இந்த நிறுவனங்களை தனியார்மயமாக்கவும் முயற்செய்யப்பட்டு வருகின்றது. மன்னாரில் 100 மெகாவொற் மின்நிலையமொன்று எமக்கு இருக்கின்றது. எமது கிரயம் 3.5 சதம் டொலர் ஆகும். டெண்டர் கோராமல் 500 மெகாவொற் மின்நிலையத்தை அதானிக்கு கொடுக்க தயாராகி வருகிறார்கள். ஒரு வருடத்திற்கு 151 மில்லியன் டொலர்கள். இந்த உடன்படிக்கை 30 வருடங்களுக்காக கைச்சாத்திடப்படுகின்றது. அவர் 30 வருடங்களில் 4 பில்லியன் டொலர்களை கொண்டுபோகிறார்.பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் இந்த விற்பனை எவ்வாறு பாதிக்கின்றது என்பதைக் கண்டறிவதற்காகவும் ஊழியர் எண்ணிக்கையை வினைத்திறன் உடையவர்களாக்குவதற்காகவும், ஒருசில கருத்திட்டங்கள் தாமதமடைவதை தடுப்பதற்காகவும், மக்களின் கோரிக்கைகள் நலிவடைவதை தடுப்பதற்காகவும் உள்ளக மறுசீரமைத்தலொன்று மேற்கொள்ளப்படல் வேண்டும்.  

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எண்ணெய் கொண்டு வருகின்றது. தனியார் கம்பெனியொன்று களஞ்சியப்படுத்துகின்றது: விநியோகின்றது. இங்கு எந்தெந்த இடத்தில் நட்டம் ஏற்படுகின்றது? அரசாங்கம் எண்ணெய் மானியம் வழங்க தீர்மானித்தமையும் அதன் சுமையை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்மீது சுமத்தியமையும் காரணமாக பெற்றொலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைகின்றது. மக்களுக்கு மானியம் வழங்கப்படல் வேண்டும். அந்த சுமையை திறைசேரி ஏற்கவேண்டும். அரசாங்க நிறுவனங்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தவேண்டிய தொகையை செலுத்தாமையும் நட்டமாக அமைகின்றது. உதாரணமாக எயார் லங்கா கம்பெனி பெற்றோலியக் கூட்டத்தாபனத்திற்கு 25.6 பில்லியன், மின்சார சபை 47 பில்லியன், தனியார் மின்நிலையங்கள் 6.7 பில்லியன், முப்படையினர் 820 மில்லியன் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன். பெற்றோலியக் கூட்டுத்தானத்திற்கு அந்த பணத்தை வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ள நேர்ந்தமையும் அதற்காக வட்டி செலுத்தவேண்டி நேரிட்டமையும் காரணமாக நட்டம் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு ரில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டத்திற்கு ரூபாவின் வீழ்ச்சியும் ஏதுவாக அமைந்துள்ளது. இந்த நிறுவனங்கள் முறையாக முகாமை செய்யப்படாமையும் ஊழியர் எண்ணிக்கை அதிகரித்தமையும் அரசியல் தலையீடும் இந்த நட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. தூய்மையகம் 1969 இலேயே தொடங்கப்பட்டது. முறையான முகாமைத்துவமின்மையால் அது நட்டமடைகின்ற நிலைமை உருவாகியுள்ளது.

பொருளாதாரத்தின் உயிர்நிலைகளை ஒழுங்குறுத்திப் பேணிவர இயலாது. வலுச்சக்தி துறை அரசாங்கத்திற்கு சொந்தமானதாக வைத்தக்கொள்ளப்பட வேண்டும். நிதிச்சந்தை போட்டித்தன்மைகொண்டதாக பேணிவரப்படல் வேண்டும். நிதிச் சந்தையை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். ஒருசில பல்தேசியக் கம்பெனிகளுக்கு நாட்டின் பொருளாதாரத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான அதிகாரத்தையும் நிதிசார் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தையும் அரசாங்கத்தை நெறிப்படுத்துவதற்கான அதிகாரத்தை வழங்குவதற்கான திட்டமும் தீட்டப்பட்டு வருகின்றது. நாங்கள் அதனை தோற்கடித்திட வேண்டும். நிதிச்சந்தையை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். ஒழுங்குறுத்துதல், போட்டித்தன்மை, சந்தையில் இடையீடு செய்வதன் மூலமாக அரசாங்கத்தின் பொருளாதாரப் பங்கினை அரசாங்கம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நிகழ்கால பொருளாதாரக் கொள்கைகளை வைத்துக்கொண்டு ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நிலவுகின்ற பொருளாதார உபாயமார்க்கத்தையும் இந்த அரசியல் பயணப்பாதையையும் வைத்துக்கொண்டு இனிமேலும் முன்நோக்கி நகர முடியாது. இந்த பயணப்பாதை மாற்றப்படல் வேண்டும்.
Published from Blogger Prime Android App