வடக்கு, கிழக்கை தனி இராச்சியமாக்க அமெரிக்க தூதுவர் சதி : வாசுதேவ நாணயக்கார

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனி இராச்சியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் நோக்கம் என கடுமையாக குற்றஞ்சாட்டிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, அமெரிக்க தூதுவர் மீதான தமது கடுமையான கண்டனத்தை பாராளுமன்றில் தெரிவிப்பதாகவும் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று வியாழக்கிழமை (1) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது.ஆனால் இந்தியா குறுகிய காலப்பகுதியில் 3 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

பிற தரப்பினரிடமிருந்து கடன் பெற்றுக் கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது அவசியம் என அரசாங்கம் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறாயின் தொடர்ந்து கடன் பெறுவதை அரசாங்கம் பரிந்துரைக்கிறதா?

கடன் சுமை அதிகரிக்கப்படுமாயின் அதனை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது,கடனை எவ்வாறு திருப்பி செலுத்துவது,கடன் பெறுவதற்கான யோசனை முன்வைக்கப்படுகிது,ஆனால் கடனை திருப்பி செலுத்தும் யோசனை முன்வைக்கப்படுவதில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பற்றி குறிப்பிடுபவர்கள், விதிக்கப்படும் நிபந்தனைகளினால் ஏற்படும் பாதிப்பு குறித்து கவனம் செலுத்தவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன. தேசிய கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல நிபந்தனைகள் கடினமானது எனவும் மக்களின் விரோதத்தை தீவிரப்படுத்தும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடினமான நிபந்தனைகளை செயற்படுத்தினால் அரசாங்கம் மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு முகம் கொடுக்க நேரிடும். இலங்கையின் உள்ளக நிர்வாகத்தில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஏன் தலையிடுகிறார்?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை தனி இராச்சியமாக மாற்றியமைக்கும் விடயதானத்தை அமெரிக்க தூதுவர் பொறுப்பேற்றுள்ளார். இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட அமெரிக்க தூதுவருக்கு அதிகாரமில்லை.

காலி முகத்திடல் போராட்டத்திற்கு அமெரிக்க தூதுவர் ஒத்துழைப்பு வழங்கினார். முன்னாள் கோட்டபய ராஜபக்ஷவை போராட்டத்தின் ஊடாக விரட்டினார், ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். தற்போதும் அமெரிக்க தூதுவர் போராட்டத்திற்கு அனுசரனை வழங்குகிறார்.

இலங்கையில் போராட்டத்தை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க தூதுவர் ஈடுப்படுகிறார். அதற்காக நிதி செலவு செய்யப்படுகிறது.

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு பிறிதொரு இராச்சியத்தை பெற்றுக்கொடுக்க அமெரிக்க தூதுவர் முயற்சிப்பது தமிழ், முஸ்லிம் மக்களுக்காக அல்ல,அது அமெரிக்கா, இலங்கையை பலவீனப்படுத்தி, இராச்சியமாக வேறுப்படுத்தி எம்.சி.சி.ஒப்பந்தந்தை செயற்படுத்தும் நோக்கம் அமெரிக்காவுக்கு உண்டு.

இலங்கையை யுத்த தளமாக மாற்றியமைக்கும் தேவை அமெரிக்காவுக்கு உண்டு அமெரிக்கா தூதுவர் ஜூலி சங்கிற்கு பாராளுமன்றில் எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம். இதனை பாராளுமன்ற ஹன்சாட்டில் பதிவு செய்யுங்கள் என்றார்.
Published from Blogger Prime Android App