பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சரத்துக்களை மாற்றுதல் அல்ல சட்டமே மாற்றப்பட வேண்டும் ! - கி.சேயோன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள சரத்துக்களை மாற்றுதல் என்ற விடயத்தை விடுத்து இந்தச் சட்டத்தை முற்றமுழுதாக நீக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினருமான கி.சேயோன் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கெதிராக கையெழுத்து சேகரிக்கும் வாகனப் பவணி பற்றி கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண மற்றும் பொருளாதார சூழ்நிலைகளினால் தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் போயிருந்தது. 

தற்போது நாட்டின் நிலைமை ஓரளவிற்கு வந்துள்ளமையாலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளமையினாலும் எம்மால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தினை மீண்டும் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தீர்மானித்து கடந்த 10ம் திகதி மாவட்டபுரம் கந்தசாமி ஆலயத்தில் இருந்து வாகனப் பவணியாக ஆரம்பித்துள்ளோம்.

இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் எமது நாட்டின் சிறுபான்மை இனம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் தமிழ் மக்கள் இதனால் அதிகம் பாதிப்புற்றிருக்கின்றார்கள். இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என அரசியற் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் மிகவும் போராடியதன் நிமித்தம் சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடமிருந்து பாரிய அழுத்தத்தின் மத்தியில் பயங்ககவாதத் தடைச்சட்டத்தில் உள்ள மனித குலத்திற்கு எதிரான சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும் என்பதுடன் பயங்கரவாதத்; தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டதன் விளைவாக 2018ம் ஆண்டு ஒரு திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்திருந்தது.

இருந்த போதிலும் தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் உள்ளது போன்றே எவ்வித மாற்றங்களும் இல்லாமல் சில சில சரத்துக்களை மாற்றி இருப்பதை விட மோசமான சட்டமாகவே அது கொண்டு வரப்பட இருந்தது. எனவே இந்தச் சட்டத்தில் உள்ள சரத்துக்களை மாற்றுதல் என்ற விடயத்தை விடுத்து இந்தச் சட்டத்தை முற்று முழுதாக நீக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கின்ற அரசியற் கட்சிகள், பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் என்பன இணைந்து இப்போராட்டத்தினை மீண்டும் ஆரம்பித்திருக்கின்றோம்.

எனவே இன மத பேதமின்றி இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க அனைவரையும் அழைக்கின்றோம் என்று தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App