சீமெந்து, இரும்பு போன்ற மூலப்பொருட்களின் விலை தொடர்பில்எதிர்வரும் வாரத்தில் நடவடிக்கை!

கைத்தொழில் துறைக்குத் தேவையான சீமெந்து, இரும்பு போன்ற மூலப்பொருட்களின் விலை தொடர்பில் நிலவும் பிரச்சினையை தீர்க்க எதிர்வரும் வாரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.


உணவுப் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்புக் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவது மிகவும் முக்கியம் என்றும் நாட்டில் உற்பத்தியை உயர்த்தி தன்னிறைவு நிலையை உருவாக்கி உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை வரலாற்றில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை அரிசி தட்டுப்பாடு நிலவுவதாகவும் உணவு இருப்பு வைத்து நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.