இந்தியாவை கைகூப்பி வணங்க வேண்டும்.-குமார வெல்கம பா.உ
இந்தியாவை கைகூப்பி வணங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், சீனா ஏதாவது எதிர்பார்ப்புடனேயே இலங்கைக்கு உதவி வருகிறது. அமெரிக்காவும் இலங்கைக்கு உதவி வருகிறது.

எனினும் குறைந்த அளவிலேயே அந்த உதவிகள் அமைந்துள்ளன. எனினும் இந்தியாவை பொறுத்தவரை, அந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக கூறவேண்டும். அவரின் சிறந்த முகாமைத்துவம் காரணமாக, இந்தியாவில் டொலர் பிரச்சினை இல்லை. பணவீக்கம் இல்லை. இந்த நிலையில் இந்தியா, இலங்கைக்கு 4 பில்லியன் டொலர்களை தந்து உதவியிருக்கிறது.

இந்தியா, இலங்கையின் பெரிய அண்ணன், அண்ணன் தமது தம்பியை நன்றாக பார்த்துக்கொள்கிறார். எனவே இந்தியாவுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படவேண்டும்.

ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டம் சிறந்தது.எனினும் வரவை விட செலவு 100 வீதம் என்பதால் அதனை நடைமுறைப்படுத்தமுடியுமா? என்பது குறித்து சிந்திக்கவேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லதை செய்துள்ளபோதிலும் அவர், தவறையும் செய்துள்ளார்.

ஜப்பானின் அபிவிருத்தி திட்டத்தில் இலஞ்சம் கேட்டார் என்ற காரணத்தினால், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பதவி விலகக்கோரினார். எனினும் ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வந்த பின்னர் ஆணைக்குழுவை அமைத்து மீண்டும் அவரை அமைச்சராக்கியுள்ளார். இது தவறான விடயம். இது தொடர்பில் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஜப்பானிய தூதுவரே இந்த விடயத்தில் முறைப்பாடு செய்தநிலையில் இது எவ்வாறு இடம்பெறமுடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக, போராட்டம் மீண்டும் எழுச்சிபெறும் என்பதை ஜனாதிபதி மறந்துவிடக் கூடாது.

இலங்கையில் அரசியலமைப்பை திருத்தவேண்டும். இல்லையேல் 19ஆவது திருத்தத்தையாவது கொண்டு வரவேண்டும். இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க தமது நிலைப்பாட்டை வெளியிடவேண்டும். மோசடிக்காரர்களை அமைச்சரவைக்கு கொண்டு வரவேண்டாம் அமைச்சரவையில் அரசாங்க கட்சியினர் இருக்கின்றபோது, பாராளுமன்ற குழுக்களின் தலைமைப்பொறுப்புக்களை எதிர்கட்சி கோருகிறது. அதுவும் அமைச்சரவை அந்தஸ்தை கொண்ட குழுக்களே. எனவே அவற்றில் எவ்வித வேதனங்களும் இல்லாமல் சேவை செய்ய வேண்டும் என்று சஜித் பிரேமதாச தமது கட்சியினருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் குமார வெல்கம கேட்டுக்கொண்டார்.

இதேவேளை நிகழ்வு ஒன்றின் போது கருத்துரைத்த மஹிந்த ராஜபக்ச, தாம் ஒரு டொலரையாவது கொள்ளையடித்திருந்தால் வயிற்றை கிழித்துக்கொண்ட இறந்து விடுவேன் என்று கூறினார். இது பெரிய சவாலாகும். இந்தநிலையில் அண்மையில் ராஜபக்சர்கள் 40 கோடி ரூபா செலவில் வீடு ஒன்றை கொள்வனவு செய்ததாக சட்டத்தரணி உபுல் ஜயசூரிய குற்றம் சுமத்தியிருக்கிறார்.

இதனை தேடவேண்டும். இதனை தேடிப்பிடித்து அவர்கள் கொள்ளையடித்தார்கள் என்பதை நிரூபித்தால், ராஜபக்சர்களை நிரந்தரமாக வீடுகளுக்கு அனுப்பி விடலாம். எனினும் வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக்கி இலங்கைக்கு அனுப்புவதால் இதனை தேட முடியாது. சஜித் பிரேமதாச சிறந்தவர் அவர் கொள்ளையடிக்கமாட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.