கஜிமாவத்தை தீ பரவல் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணங்களை வழங்க விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு !

கொழும்பு மாவட்டச் செயலகப் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீயினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று (28) கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தீ விபத்தினால் 71 வீடுகளில் இருந்த 306 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 60 வீடுகள் முழுமையாகவும் 11 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள 306 பேரில் 106 சிறுவர்கள் அடங்குவர். இதற்கமைய பாதிக்கப்பட்ட மக்கள் மோதரை உயன சனசமூக மண்டபத்திலும் களனி நதி விகாரையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம், கொழும்பு மாநகர சபை, மாதம்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு பொலிஸ் மற்றும் முப்படை ஆகியன இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு, பானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றன.

இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கான சுகாதார வசதிகள், பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்படுகிறது. சர்வோதய உட்பட பல அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் அக்குடும்பங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உலர் உணவுகள் வழங்கப்பட்டுள்ளது

மேற்படி வீடுகள் கடந்த இரண்டு வருடங்களுள் 03 தடவைகள் தீக்கிரையாகி இருப்பதனால் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முறையான பக்கச்சார்பற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வுபெற்ற மேஜர் பிரதீப் உந்துகொட மற்றும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணங்கள் மற்றும் இந்தப் பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் குடியிருப்பாளர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் அடுத்த 07 நாட்களுக்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவசர அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் இந்த விசாரணைக் குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.

தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள சகல பாடசாலை மாணவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை (03) முதல் வழமை போன்று பாடசாலைக்குச் செல்லத் தேவையான பாடப் புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கர்ப்பிணித் தாய்மாருக்கும் பெண்களுக்கும் சகல சுகாதார வசதிகளையும் சமைத்த உணவுகளையும் தொடர்ந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட தற்காலிக தங்குமிடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, பந்துல குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான காமினி லொக்குகே, சரத் வீரசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன, யாதாமினி குணவர்தன, மதுர விதானகே, ஓய்வுபெற்ற மேஜர் பிரதீப் உந்து கொட, கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Published from Blogger Prime Android App