சுகாதார துறை கொள்கை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி வலியுறுத்தல் !

கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் வசதிகளை விஸ்தரித்து அபிவிருத்தி செய்வதுடன், முழு சுகாதாரத் துறையிலும் கொள்கை மாற்றத்தின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச மருத்துவ சங்க அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, ​​நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கையை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கையளித்துள்ளதுடன், சுகாதாரத்துறை மற்றும் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மருந்துத் தட்டுப்பாடு மற்றும் மருந்துப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைத் தீர்ப்பதற்கான அவசர முறைமையின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். மருந்துகள் உட்பட சுகாதாரத் துறையின் ஏனைய தேவைகள் குறித்து உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சுகாதார அமைச்சு, மருத்துவ விநியோகப் பிரிவு, அரச மருந்துக் கூட்டுத்தாபனம், அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பில் உள்ள குறைபாடுகளை உரிய குழுவின் அறிக்கை கண்டறிந்து, அதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை நியமிப்பதற்கு முன்மொழிந்துள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் குழு மாதாந்த முன்னேற்ற மதிப்பாய்வுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கடந்த ஐந்தாண்டுகளுக்குள் சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகளை ஆராய தொழில்நுட்பக் குழுவொன்றை நியமிக்கவும் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

புற்று நோயாளர்களுக்கான மருந்துகள் மற்றும் இன்சுலின் தட்டுப்பாடு காணப்படுவதாகவும், இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் வைத்தியர்களுக்கான மேலதிக கடமை கொடுப்பனவுகள், வைத்தியர்களுக்கான உத்தியோகபூர்வ போக்குவரத்து வசதிகள் மற்றும் கொடுப்பனவுகளை மீள்திருத்தம் செய்தல், வெளிநாட்டு விடுமுறை தொடர்பான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை திருத்தம் மற்றும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்தல் தொடர்பிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் யோசனைகளை சமர்ப்பித்துள்ளது.
Published from Blogger Prime Android App