பொருளாதார அபிவிருத்தியில் நாடு பின்னடைய இனவாதமே காரணம் : முஷாரப் MP

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலேயே முதன்மையான நாடாக பார்க்கப்பட்ட இலங்கை அபிவிருத்தி அடையாத நாடுகளின் நிலைமைகளை நோக்கி பின்னோக்கி தள்ளப்பட்டதற்கான அடிப்படை காரணம் இனவாதமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (08) உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டை சீரழித்தது இனவாதமாகும். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கொடிய யுத்தம் தோன்றுவதற்கு முன்பிருந்தே நாட்டில் உள்ள அனைத்து மக்களிடமும் இலங்கையர்கள் என்ற உணர்வு குறையத் தொடங்கியது. ஒரு சமூகத்திற்காக ஒரு இனத்திற்காக என அரசியல் செய்ய முற்பட்டோமோ அன்றிலிருந்து இந்த நாட்டினுடைய பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு போய்விட்டது . எனவே இனவாதமற்ற சூழ்நிலையை உருவாக்கினால் மாத்திரமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். அன்றி இந்த நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என்ற யதார்த்தத்தை சகலஇன மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக எமது நாட்டிலே அரசியல் தலைவர்கள், இந்த இனவாதம் நாட்டை எவ்வாறு குட்டிச்சுவராக மாற்றியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே போர் குற்றங்கள் தொடர்பில் பேசப்படும் செப்டம்பர் மாதத்திலும் மார்ச் மாதங்களிலும் மாத்திரமே இனவாத பேச்சுக்கள் வரும். இது பற்றியே நாம் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருப்போம். அரசாங்கம் மேற்குலகுக்கு எதிராக நிற்கின்றதோ அப்போதெல்லாம் இலங்கை மிகவும் நெருக்கடியான சர்வதேச அழுத்தத்திற்கு உள்ளாகின்றது என்பதே யதார்த்தமாகும், என்றார்.
Published from Blogger Prime Android App