ஐக்கிய மக்கள் சக்தி , எதிர்ப்பு பேரணியின் போது கைது செய்யப்பட்ட 15 பேருக்கு பிணை !

ஐக்கிய மக்கள் சக்தி, நாவலப்பிட்டி நகரில் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு பேரணியின் போது கைது செய்யப்பட்ட 15 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நாவலப்பிட்டி நீதவான் நீதவான் நிலந்த விமலரத்ன முன்னிலையில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

‘ஒன்றாக எழுவோம்’ மக்கள் சந்திப்பின் இரண்டாவது பேரணி, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நாவலப்பிட்டி நகரில் இடம்பெற்றது. இதனிடையே ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு தரப்பினர் நாவலப்பிட்டி நகரில் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு பேரணியின் போது காவல்துறையினருக்கும் பேரணியில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பேரணியில் பங்கேற்க சென்றவர்கள் பயணித்த வீதியில் புல் மற்றும் புண்ணாக்கு என்பன போடப்பட்டிருந்ததுடன் சில வர்த்தக நிலையங்களில் கறுப்பு கொடிகளும் ஏற்றப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், இந்த பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என பொலிஸார் அறிவித்ததனை அடுத்து அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

இதன்போது, பொலிஸாரால் 15 பேர் கைது செய்யப்பட்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சசங்க சம்பத் மற்றும் நகர சபை உறுப்பினர் ஒருவரும் பிரதேச சபை உறுப்பினரும், அவர்களில் அடங்குகின்றனர்.

ஒரு அரசியல் கட்சி கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ள இடத்தில், மற்றுமொரு கட்சியின் உறுப்பினர்கள் பயணிப்பதன் மூலம் இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாட்டு நிலை ஏற்படக்கூடும் என்பதால், குறித்த மக்கள் சந்திப்பு இடம்பெறும் இடத்தில் உள்ள வீதியில் பேரணியில் ஈடுபட வேண்டாம் என பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published from Blogger Prime Android App