22ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து ஆராயவும் - ஜனாதிபதி !

நாடாளுமன்றத்தில் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் கலந்துரையாடி மேலதிக ஆய்வில் ஈடுபடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின்போது நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தின்போது, அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டமூலம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுவில் அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை இம்மாதம் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எவ்வாறாயினும், தற்போதைக்கு அரசியலமைப்பு திருத்தம் தேவையில்லை என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தருணத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் நாட்டுக்கு தேவை என பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த அதிகாரங்களை விட்டுக்கொடுக்க இது பொருத்தமான சந்தர்ப்பம் அல்ல எனவும் நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு ஜனாதிபதியின் அதிகாரங்கள் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கு பொதுஜன பெரமுனவின் 30க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் அரசியலமைப்புத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தால் அதற்கு நாடாளுமன்றத்தில் இருந்து நம்பிக்கையான பதில் கிடைக்காது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது ஜனாதிபதிக்கும் பிரச்சினையாக அமையும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே, 22ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Published from Blogger Prime Android App