கிழக்கு மாகாணத்தில், 397 கணித பாட ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு : கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் !

கிழக்கு மாகாணத்தில், 397 கணித பாட ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு நிலவும் அதேவேளை, மேலதிகமாக 397 ஆசிரியர்கள் கல்முனை வலயத்தில் இருப்பதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.

றாணமடு இந்து மகா வித்தியாலய ஆசிரியர் தின விழா, நேற்று முன்தினம் (25) அதிபர் கே. கதிரைநாதன் தலைமையில் நடைபெற்றபோது, பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்குறிப்பிட்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பொதுவாக கிழக்கு மாகாணத்தில் 397 கணித பாட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது . விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு வலயம் சார்ந்த பற்றாக்குறை நிலவுகின்றது.

தொழில் உலகத்தை நோக்கிய பயணம் எம்மிடையே குறைவு. இன்று உலகில் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் படுவேகமாக நடந்து வருகின்றன. எனவே, எதிர்காலத்தில் உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பாடங்களில் மாணவர்கள் கற்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்.

அதிர்ஷ்டவசமாக சம்மாந்துறை வலயத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லை. ஆனால், அருகில் இருக்கக்கூடிய கல்முனை வலயத்தில், கிழக்கு மாகாணத்தில் அதிககூடிய மிகையாக 397 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். உலக வங்கி மற்றும் ஏனைய திட்டங்கள், கணக்காய்வு நிறுவனத்தின் அறிக்கைகளின் படி, கல்முனை வலயத்திலே ஏகப்பட்ட பிரச்சினைகள், கேள்விகள் வருகின்றன. இதனை சீர்செய்யுமாறு, கிழக்கு மாகாண ஆளுநர், செயலாளரூடாக எனக்குப் பணிப்புரை வழங்கி இருக்கின்றார் என்றார்.

‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது பெற்ற மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், பாடசாலையாலும் வலயத்தாலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
Published from Blogger Prime Android App