மீன்பிடி துறைமுகங்களுக்கு நாளாந்தம் 500,000 லீற்றர் எரிபொருளை வழங்க நடவடிக்கை : இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் !

மீன்பிடி துறைமுகங்களுக்கு நாளாந்தம் 500,000 லீற்றர் மண்ணெண்ணையை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

மீனவர்களின் எரிபொருள் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அதன் செயலாளர் இந்து கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளது. இதற்காக சுமார் 27,000 மீன்பிடி படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.

இந்த மீன்பிடி படகுகளில் பெரும்பாலானவை நாளாந்த மீன்பிடியில் ஈடுபடுவதுடன், கடந்த காலங்களில் அவர்கள் எதிர்கொண்ட பிரதான பிரச்சினை மண்ணெண்ணெய் தட்டுப்பாடாகும்.

இதேவேளை, மீன்பிடி துறைமுகங்களின் குறைபாடுகள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறியும் விசேட வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, கிரிந்த மீனவர் துறைமுகம் உள்ளிட்ட துறைமுகங்கள் மற்றும் தங்காலை, புறணாவெல்ல, சுதுவெல்ல ஆகிய துறைமுகங்களை அவதானிக்கும் விஜயத்தில் பொறுப்பான அமைச்சர் மற்றும் அவர் உள்ளிட்ட குழுவினர் ஈடுபடவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினைகளை அடையாளம் காண்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். அவர்களுக்கான நிவாரணம் உடனடியாக வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Published from Blogger Prime Android App