சிறுவர், ஆசிரியர் தினங்கள் உள்ளிட்ட இதர நிகழ்வுகளுக்காக மாணவர்களிடமோ அல்லது பெற்றோரிடமோ பணம் அறவிடக் கூடாது !

கல்வி அமைச்சால் ஒவ்வொரு பாடசாலைக்கும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர சிறுவர், ஆசிரியர் தினங்கள் உள்ளிட்ட இதர நிகழ்வுகளுக்காக மாணவர்களிடமோ அல்லது பெற்றோரிடமோ பணம் அறவிடக் கூடாது என கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களிடம் அங்கிகரிக்கப்படாத கட்டணங்களை பெறுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் முறைசாரா முறையில் பணம் அறவிடப்படுவதைத் தடுக்கும் வகையில் 2015/5 இலக்கம் கொண்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய கல்வி அமைச்சின் செயலாளர், பிள்ளைகளின் கல்விக்காக கடுமையான நிதி சிக்கல்களுக்கு மத்தியில் பெற்றோர்கள் பாடுபட்டு வரும் நிலையில் இவ்வாறான பணச் செலவுகளை நிறுத்துவது அதிபர்களின் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் மாணவர்களிடம் தேவையில்லாமல் பணம் கேட்டால் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு எனவும் செயலாளர் தெரிவித்துள்ளார். பாடசாலைக் கட்டணத்தைக் கூட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வற்புறுத்திக் கேட்கக் கூடாது என்றும், பெற்றோரால் அந்தத் தொகையைச் செலுத்த முடியாவிட்டால் கிராம உத்தியோகத்தரிடம் சான்றிதழைச் சமர்ப்பித்து அதைச் செலுத்தாமல் இருக்க முடியும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Published from Blogger Prime Android App