போராட்டக்காரர்கள் மீது காலாவதியான கண்ணீர் புகைக் குண்டுகளை நடாத்தியமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் , தகவல்களை வழங்கவும் : பொலிஸாருக்கு உத்தரவு !


போராட்டக்காரர்கள் மீது காலாவதியான கண்ணீர் புகைக் குண்டுகளை நடாத்தியமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தபப்டும் நிலையில், குறித்த விடயத்தை மையப்படுத்தி கோரப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதிக்குள் தகவல் கோரியவருக்கு வழங்க வேண்டும் என தகவல் அறியும் உரிமைகள் தொடர்பான ஆணைக் குழு நேற்று (27) பொலிஸாருக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.

அவ்வாறு குறித்த திகதிக்குள் கோரப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் வழங்கத் தவறினால், பொலிஸ் திணைக்களத்தின் உரிய தகவல் அதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 39 ஆவது அத்தியாயத்தின் கீழ் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்படும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கோரப்பட்டுள்ள தகவல்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 25 (3) ஆம் அத்தியாயம் பிரகாரம் 48 மணி நேரத்துக்குள் வழங்கப்படவேண்டிய வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துடன் தொடர்புபட்ட தகவல்கள் எனவும் ஆணைக் குழு தீர்மானித்தது.

காலாவதியான கண்ணீர்ப் புகைக் குண்டுகள் தொடர்பில், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன முன் வைத்த தகவல் கோரிக்கை பிரகாரம், அந்த தகவல்களை வழங்காமை தொடர்பில் தகவல் அறியும் உரிமைகள் தொடர்பிலான ஆணைக் குழுவில் அந்த ஊடகவியலாளரால் மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மேன் முறையீடு பண்டாரநாயக்க சர்வதேச மா நாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழு முன்னிலையில் கடந்த சில மாதங்களாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்படியே நேற்று விசாரணையின் தீர்ப்பினை ஆணைக் குழு அறிவித்தது,

இந்த மேன் முறையீடானது, தகவல் அறியும் உரிமை ஆணைக் குழுவின் ஆணையாளர்களான ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹினி வல்கம, சட்டத்தரணி கிரிஷாலி பின்டோ ஜயவர்தன, சட்டத்தரணி ஜகத் லியன ஆரச்சி, ஆணையாளர் மொஹம்மட் நஹியா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அனைவரது ஒப்புதலுடனும் நேற்று தீர்ப்பறிவிக்கப்பட்டது.

தீர்ப்பின் சுருக்கத்தை, ஆணைக் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன அறிவித்து அனைத்து தகவல்களும் வழங்கப்பட வேண்டும் என ஆஜராகியிருந்த பொலிஸ் அதிகாரிக்கு அறிவித்தார்.

கண்ணீர் புகைப் பிரயோகம் செய்ய காலாவதியான குண்டுகளை பயன்படுத்தியமை, அவ்வாறு அவற்றை பயன்படுத்த அனுமதி வழங்கியது யார் உள்ளிட்ட தகவல்களை தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் விடயங்கள் என்பதால் வழங்க முடியாது என கூறி பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க மறுத்து எழுத்து மூலம், தகவல் கோரிய ஊடகவியலாளருக்கு பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் மேன் முறையீட்டை ஆராய்ந்த தகவல் உரியும் உரிமை ஆணைக் குழு, குறித்த தகவல்கள் எப்படி தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் என விலக்குமறு பொலிசாருக்கு அறிவித்த போதும் அதனை விளக்க பொலிஸார் தவறியிருந்தனர்.

அத்துடன் 2010 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் கண்ணீர் புகைக் குண்டுகள் கொள்வனவு செய்யப்பட்டமையை மையப்டுத்திய விலை மனுக்களையும் தகவல் அறியும் உரிமை ஊடாக குறித்த ஊடகவியலாளர் கோரியிருந்த நிலையில், பொலிஸ் திணைக்களம் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வழக்குகளுடன் தொடர்புபடாத ஆவணங்களை அழித்து விடுவதால் குறித்த தகவல்களை வழங்க முடியாது என பதிலளிக்கப்பட்டிருந்தது.

அந்த தகவல் உண்மையாயின், கடந்த 5 வருடங்களுக்குள் கண்ணீர் புகைக் குண்டுகள் கொள்வனவு செய்யப்படவில்லை என தெளிவாவதாகவும், அப்படியானால் போராட்டங்களின் போது பயனபடுத்தப்பட்ட கண்ணீர் புகைக் குன்டுகள் 5 வருடங்களுக்கு முன்னர் கொள்வனவுச் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும் எனவும் மேன் முறையீட்டின் போது, மேன் முறையீட்டாளர் தரப்பின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம், 12 வருடங்களுக்குட்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், அது தொடர்பில் பொலிஸ் திணைக்களமே சுற்று நிருபம் ஒன்றினை வெளியிட்டுள்ளதாகவும் அவ்வாறான பின்னணியில் பொலிஸாரே கோரப்பட்ட தகவல்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறுவது தகவல் அறியும் சட்டத்தை மீறும் செயல் என ஆணைக் குழு சுட்டிக்காட்டியது. அவ்வாறு சட்டத்தை மீறும் வகையில் பொலிஸார் செயற்பட்டால், நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் பொலிஸாருக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியும் எனவும் அதில் இரு வருடங்கள் வரையிலான சிறைத் தண்டனைக் கூட விதிக்கப்பட முடியும் என ஆணைக் குழு எச்சரித்திருந்தது.
Published from Blogger Prime Android App