ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் பூரணப்படுத்துவோம் - கல்வி அமைச்சர் சுசில் உறுதி!
அரச வேலைவாய்ப்புக்காக இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கும் 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பொதுப் பரீட்சை நடத்தி ஆசியரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அடுத்தவருடம் முதலாம் தவணை ஆரம்பிக்கும்போது இந்த நடவடிக்கைகளை பூரணப்படுத்துவோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தாெடர்ந்து தெரிவிக்கையில்,

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கின்றன. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறிய ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அபிவிருத்தி அதிகாரிகளாக 22ஆயிரம் பட்டதாரிகள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர். 

அவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பதிருக்கின்றோம்.

அத்துடன் அரச சேவைக்கு 53ஆயிரம் பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவர்கள் அனைவருக்கும் பொதுத் பரீட்சை நடத்தி புள்ளிகள் அடிப்படையில் அவர்களை தேசிய, மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அதேநேரம் மாகாண மட்டத்திலும் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த நடவடிக்கைகளை அடுத்தவருடம் முதலாம் தவணை ஆரம்பிக்கும்போது பூரணப்படுத்த முடியுமாகும்.

மேலும் பாடசாலைகளில் வெற்றிடமாகி இருக்கும் அதிபர் வெறிடங்களை பூரணப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பாடசாலைகளில் பதில் அதிபர்களாக இருந்தவர்களை அதிபர் சேவை 3 க்கு நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

என்றாலும் 2019 இல் அதிபர் சேவை 3ஆம் தரத்துக்கு 1700பேருக்கு பரீட்சை நடத்தியபோது, பரீட்சையில் அதிக புள்ளி எடுத்தவர் நேர்முக பரீட்சையில் புள்ளி குறைந்ததால் அவர்களில் 169பேர் நீதிமன்றம் சென்றனர். இதன் காரணமாக அந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது.

அதனால் பதில் அதிபர்கள் 2682பேரும் நேரமுக பரீட்சையில் தெரிவான 1700பேர் மற்றும் நீதிமன்றம் சென்ற 169பேர் இந்த 3தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடி, இணக்கப்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். 

என்றாலும் அரச சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி பதில் அதிபர்கள் 2682பேருக்கு அதிபர்  நியமனம் வழங்க தற்போது நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அத்துடன் ஏனைய 700பேர் மற்றும் 169பேரையும் இணைத்து மொத்தமாக சுமார் 4ஆயிரம் அதிபர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

இந்த பிரச்சினைக்கும் அடுத்த வருடம மார்ச் மாதம் முதலாம் தவணை ஆரம்பிக்கும் பாேது தீர்வுகாணலாம் என எதிர்பார்க்கின்றோம்.

என்றாலும் எதிர்வரும் டிசம்பர் மாதமாகும் போது 60வயது பூரணமான அதிபர்கள் ஓய்வு பெற்றுச்செல்லும்போது மேலும் அதிபர் வெற்றிடம் இடம்பெறும். அதனால் அதிபர் சேவை தரம் 3க்கு விண்ணப்பம் கோர நடவடிக்கை எடுப்போம் என்றார்.