இலங்கையின் உள்விவகாரங்களில் ஜெனீவா தேவையில்லாமல் தலையிடுகின்றது - அலி சப்ரி !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார குற்றங்களுக்கு யாரேனும் பொறுப்புக் கூறினால் அவர்கள் மீது நாட்டின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றங்கள் என்ற சொல்லை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இலங்கைக்கு இப்போது தேவைப்படுவது பொருளாதார சீர்திருத்தங்கள் மாத்திரமே என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து இலங்கைக்கு கல்வி கற்பிப்பதற்கான நிபுணத்துவம் ஐக்கிய நாடுகளின் உரிமைகள் பேரவைக்கு இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

எனினும், பொருளாதார சீர்திருத்தங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பனவே என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் கடன் மறுசீரமைப்பு நிபுணர்களுடன் இணைந்து பொருளாதார சீர்திருத்தங்களுக்கான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கு இடமளிக்காமல் பலவந்தமாக இலங்கையை தமது நிகழ்ச்சி நிரலில் வைத்திருப்பதாகக் கடுமையாகச் சாடிய அவர், அது இலங்கையின் உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
Published from Blogger Prime Android App