உள்நாட்டில் மருந்து உற்பத்திக்கு முன்னுரிமை, மருந்து தொழிற்சாலைகளை திறக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது : சுகாதார அமைச்சர் !

அரசாங்கம் உள்நாட்டில் மருந்து உற்பத்திக்கு முன்னுரிமை அளித்துள்ளதால், இலங்கையில் மருந்து தொழிற்சாலைகளை திறக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் துறையில் உயர் தொழில்நுட்ப அறிவைக் கொண்ட கொரியா போன்ற நாடுகளின் முதலீட்டாளர்கள் உட்பட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கைக்கான கொரியத் தூதுவர் வூன்ஜின் ஜியோங்கை நேற்று சுகாதார அமைச்சில் சந்தித்த போதே அமைச்சர் ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் உள்நாட்டில் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான இலக்கு வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சர், எதிர்வரும் ஆண்டுகளில் இந்தத் திட்டத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் உள்ளூர் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் மருந்து தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சுகாதாரத்துறையை மேம்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இலங்கை மற்றும் கொரியா இரண்டும் கொரோனா தொற்றுநோயால் கஷ்டங்களை எதிர்கொண்டதாகவும், வைரஸை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடியதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

கொரிய அரசாங்கம் ஏற்கனவே இலங்கையர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளதாக தூதுவர் இதன் போது தெரிவித்தார்.
Published from Blogger Prime Android App